உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / காங்., காணாமல் போய் விடுமோ?

காங்., காணாமல் போய் விடுமோ?

என்.ஏ. நாகசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆங்கிலேயர்களிடம் இந்தியாவும், மக்களும் அடிமையாக இருந்த போது, மக்களை ஓரணியில் திரட்டி, விடுதலை வேண்டி போராட உருவான அமைப்பு தான், காங்கிரஸ். இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 'இந்த அமைப்பை கலைத்து விடலாம்' என, மகாத்மா காந்தி கூறிய போது, நேரு அதை ஏற்க மறுத்தார்; விளைவு, காங்கிரஸ் ஆளுங்கட்சியாக மாறியது. நேரு மறைவுக்கு பின், யார் அடுத்த பிரதமர் என்ற போட்டி வந்த போது, தலைவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொருவர் பெயரை பரிந்துரைக்க, அன்று பெருந்தலைவர் காமராஜர் கை காட்டியது, இந்திராவை தான்.அதன்பின் காங்., கட்சி ராஜிவ், சோனியா, ராகுல் என, நேருவின் பரம்பரை சொத்தாகி போனது. ராஜிவுக்கு பின், சோனியாவை பிரதமராக்க கட்சியினர் முயற்சித்த போது, எதிர்க்கட்சிகளும், மக்களும், 'சோனியா வெளிநாட்டு பிரஜை' என, கடுமையாக எதிர்ப்பு கிளப்ப, மன்மோகன் சிங்கை பிரதமராக்கி, மறைமுகமாக சோனியா குடும்பமே நாட்டை ஆண்டது.ஆளுங்கட்சியான காங்., பலவீனமான போது, ஆட்சியை பலப்படுத்த கூட்டணி அமைத்தது; அதுவே பலவீனமாகி, ஆட்சியில் பங்கு, கூட்டாட்சி என தரம் தாழ்ந்தது. பின், மாநில கட்சிகளிடம் மண்டியிட்டது என, இன்று வரை சுயமாக எழுந்து நிற்க, காங்கிரஸ் பெரியளவில் முயற்சிக்கவில்லை.வரும் லோக்சபா தேர்தலில், பல மாநில கட்சிகளின் பலத்தோடு, பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் தோற்கடிக்க, 'இண்டியா' கூட்டணி அமைத்து, களம் காணும் முன், காங்கிரசின் கனவு கலைந்து போனது. காங்கிரஸ், தேசிய அளவில் மக்களிடம் மரியாதை இல்லாமலும், மாநில கட்சிகளிடம் அவமரியாதையோடு, சுயமரியாதை இழந்து நிற்பது பரிதாபமே.இந்த நிலை நீடித்தால், 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்ற பா.ஜ.,வின் கோஷம் நிறைவேறி விடும். கட்சி உருப்பட, மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தை ஆளும் கூட்டணி கட்சி செய்யும் ஊழல்களை எதிர்க்க வேண்டும். மவுனமாக இருந்தால், காங்கிரஸ் காணாமல் போவதை தடுக்க முடியாது.நாட்டை ஆள ஆசைப்படும் ராகுலும், அரசியல் முதிர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும். எதை பேசினாலும், அதில் அர்த்தமும், ஆழமும் இருக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். பொது நலன் கருதி உழைத்தால், போனால் போகுது என, எதிர்காலங்களில் காங்கிரசுக்கு மக்கள் வாய்ப்பு தரலாம்.

இந்தியர் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி!

மரகதம் சிம்மன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்:அமெரிக்காவில் இந்த ஆண்டில், இது வரை ஆறு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், ஐந்து பேர் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள். சமீபத்தில், வாஷிங்டனில் வசித்து வரும் 41 வயதான தொழிலதிபர் விவேக் தனேஜா என்பவர், உணவகத்தில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.இப்படி, தொடர்ந்து இந்தியர்கள் கொலை செய்யப்படுவது, அங்கு வசிக்கும் நம் மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.பல சம்பவங்களில், அது கொலையா, தற்கொலையா என்று அறிந்து சொல்ல, அமெரிக்க அரசும் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இந்தியர்கள், நன்றாக படிக்கும் தங்கள் குழந்தைகள் மேலும் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று எண்ணி, கடன் வாங்கி, அமெரிக்காவுக்கு அனுப்புகின்றனர். வெளிநாட்டில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களுக்கு, அமெரிக்க அரசு தகுந்த பாதுகாப்பு தரவேண்டும்.இந்தியர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும் அங்குள்ள நம் துாதரக அதிகாரிகள் அமெரிக்க அரசிடம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.அமெரிக்காவில் குடியேறிய தலைமுறைகளில், இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது என்கின்றனர். மேலும், கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையிலும் இந்தியர்கள் கணிசமான அளவில் வேலை செய்து வருகின்றனர். அனேக இந்தியர்கள் சொந்தமாக தொழில் துவங்கி, முதலாளிகளாகவும் வலம் வருகின்றனர்.அமெரிக்க அரசின் பல முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இந்தியர்கள் அந்நாட்டில் கவுரவமாகவும், செல்வ செழிப்புடனும் வாழ்வதை கண்டு பொறுக்க முடியாத கும்பல், இந்த சதி வேலைகளின் பின்னணியில் உள்ளதோ என்றும் எண்ண தோன்றுகிறது.எனவே, இந்திய அரசு மற்றும் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தி, இந்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மன்மோகனுக்கும் பாரத ரத்னா தரலாமே!

சாந்திதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - -- மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, சில ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக் காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'மன்மோகன் சிங் நீண்ட காலம் இந்த அவையையும், நாட்டையும் வழிநடத்திய விதம் மறக்க முடியாதது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தன் கடமைகளை சிறப்புற நிறைவேற்றியவர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு அளப்பரியது' என, மனதார பாராட்டியிருந்தார்.இந்தியா, பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த 1991 காலகட்டத்தில், பிரதமராக பதவி ஏற்றவர் நரசிம்மராவ். அவருடைய அரசுக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையிலும், வெற்றிகரமாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்.சிறந்த பொருளாதார மேதையான மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக்கினார். அவரது துணையுடன், புதிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தினார். அன்று, அவர்கள் போட்ட விதை தான், இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்றால், அது மிகையில்லை.எனவே தான், காங்கிரஸ் கட்சியினரே மறந்து விட்ட நரசிம்மராவை கவுரவிக்க, அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க முன்வந்துள்ளார் பிரதமர் மோடி.அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியையும், அக்கட்சியின் ஆட்சியையும் கடுமையாக விமர்சிப்பவர் பிரதமர் மோடி. இருந்த போதிலும், 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்பதற்கேற்ப, டாக்டர் மன்மோகன் சிங்கை மனதார பாராட்டிய செயலும், நரசிம்மராவை பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்ததும், மிகவும் பாராட்டத்தக்கது.அதே நேரம், மன்மோகன் சிங்கை பாராட்டியதுடன் நின்று விடாமல், நாட்டிற்கு அவர் செய்த சேவையை மதித்து, அவருக்கும், 'பாரத ரத்னா' விருதை வழங்கியிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.இன்னும் காலம் கடந்து விடவில்லை. இது குறித்து, மத்திய பா.ஜ., அரசு யோசிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
பிப் 16, 2024 23:03

என்.ஏ. நாகசுந்தரம், குஞ்சன்விளை.நேருவுக்கு அடுத்து வந் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.


RAMAKRISHNAN NATESAN
பிப் 16, 2024 20:44

மன்மோகனாரது ஆட்சிக்காலத்தில் (யூ பி ஏ 1 மற்றும் யூ பி ஏ 2 ) என்னென்ன ஊழல்கள் நடைபெற்றன . அலைக்கற்றை ஊழலில் இருந்த்து காமன்வெல்த் ஊழல் வரை பற்பல ஊழல்கள் அரங்கேறின அவரது ஆட்சிக்காலத்தில் ..... அவரே நிலக்கரித்த துறையை நிர்வகித்த பொழுது நிலக்கரிச் சுரங்க ஊழல் நடைபெற்றது ..... ஒருவேளை அதற்காகத்தான் பாரத ரத்நா கொடுத்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா ????


RAMAKRISHNAN NATESAN
பிப் 17, 2024 08:16

கேரளா, இடுக்கி மாவட்டம் கேட்டிருக்கிறேன் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை