உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / விஜய் கரை சேருவாரா?

விஜய் கரை சேருவாரா?

என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சினிமா புகழை வைத்து அரசியலில் குதித்து, எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம் என்பது நடிகர்களின் ஆழ்மனதில் பதிந்து விட்டது. அதற்கு விதை போட்டவர் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., என்றால், ஆந்திராவில் என்.டி.ராமராவ்! எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசியலில் ஜொலிக்கவே, நடிக -- நடிகையருக்கு அரசியல் மோகம் பற்றிக் கொண்டது. அதன் வெளிப்பாடே, டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றோர் கட்சி ஆரம்பிக்க காரணம். எம்.ஜி.ஆர்., அரசியலில் சாதிக்க காரணம், அவர் நடிகராக இருந்தபோதே, தான் நடித்த படங்களில் தன் கொள்கையை பரப்பினார். கூடவே, தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை மக்களுக்காக செலவு செய்தார். இதனால், மக்கள் அவர் திரைப்படங்களை மட்டுமல்ல; அவரையும் நேசித்தனர். அதனால் தான், தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., விலக்கப்பட்டபோது, அ.தி.மு.க., வை துவக்கி, தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். எம்.ஜி.ஆர்., வந்த பாதையை, அவரது செயல்பாடுகளை எல்லாம் மறந்து, அவர் அரசியலில் வெற்றி அடைந்தது போல், நம்மால் ஏன் முடியாது என்று எண்ணியே இங்கு நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வருகின்றனர். அவ்வரிசையில் தற்போது, நடிகர் விஜய் வந்துள்ளார். இவர் அரசியலுக்கு வரும்முன், மக்களுக்கு என்ன நன்மைகள் செய்துள்ளார் என்று கேட்டால், பெரிதாக ஒன்றுமில்லை என்றே சொல்லலாம். ஆனாலும், 1967, 1977 போல், 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்படும், தான் முதல்வர் ஆவோம் என கணக்கு போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு சாத்தியமான சினிமா புகழ், தனக்கும் கைகொடுக்கும் என கனவு காண்கிறார். ஆனால், தமிழக மக்கள் திராவிட ஆட்சியாளர்களை தவிர, புதிதாக ஒருவரை ஆதரிப்பது என்பது உடனடியாக நடக்கும் காரியம் அல்ல. எனவே, மக்கள் குறைகளை அறிந்து அரசியல் செய்யாமல், மேலோட்டமாக பிரச்னைகளை விமர்சனம் செய்து அறிக்கை அரசியல் செய்து வரும் விஜய், அரசியல் ஆற்றில் நீந்தி கரை சேருவாரா அல்லது ஆற்றோடு அடித்துச் செல்லப்படுவரா என்பது வரும் சட்டசபை தேர்தலில் தெரிந்து விடும்!

தி.மு.க.,வுடன் இணைந்து விடலாமே!

என்.ராமகிருஷ்ணன், பழனி யில் இருந்து எழுதுகிறார்: 'என்னை கொலை செய்து விட்டு, தி.மு.க.,வை கைப்பற்ற துடிக்கிறார் துரோகி வைகோ' என்று கூறி, கட்சியை விட்டு வைகோவை நீக்கினார், கருணாநிதி. அதன்பின், 'அறிவாலயத்தை கைப்பற்றுவோம்...' என்று சூளுரைத்து தோற்றுப்போனவர் தான், வைகோ. அன்று தி.மு.க.,வினர் என்ன கூறினர் தெரியுமா? 'சினிமா வாயிலாக தி.மு.க.,வை வளர்த்து, தான் உழைத்து சம்பாதித்த பணத்தை தேர்தலுக்கு செலவு செய்து, துப்பாக்கி சூட்டில் ரத்தம் சிந்தி, தி.மு.க., ஆட்சி கட்டிலில் அமர காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்., 'அவரை கட்சியிலிருந்து நீக்கிய பின், தி.மு.க.,வை கைப்பற்ற ஆசைப் படாமல் தனிக்கட்சி துவக்கினார். ஆனால், கருணாநிதி தயவில், 18 ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.,யா க இருந்து பதவி சுகம் அனுபவித்த வைகோ, அறிவாலயத்தை கைப்பற்றுவோம் என்கிறார்' என்று கூறி வசை பாடினர். மதி.மு.க., என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த பின், கருணாநி தி குடும்பத்தை எவ்வளவு கேவலமாக வைகோ பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். அன்றைய நாளில் இவரது புகைப்படத்தை நெருப்பில் எரித்து, ஆற்றங்கரையில் திதி கொடுத்தனர் தி.மு.க.,வினர். அத்தகைய தி.மு.க., வுடன் கூட்டு சேராமல், இன்று வரை வைகோ தனித்து களம் கண்டிருந்தால் , ஓரளவு மரியாதையாவது இருந்து இருக்கும். ஆனால், தனக்கு நிகழ்ந்ததையும், தான் பேசியதையும் மறந்து, பதவி சுகத்துக்காக தி.மு.க., விற்கு காவடி துாக்கிக் கொண்டிருக்கிறார். அதேபோன்று, அன்று வாரிசு அரசியல் என்று தி.மு.க.,வை அடுக்குத் தொடரில் வசைப்பாடிக் கொண்டிருந்த வைகோ, இன்று, கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தியதால், தன் மகன் துரைக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக கூறுகிறார். துரையை நாடு கடத்த வேண்டும் என்று கட்சியினர் வற்புறுத்தினால், அதையும் செய்து விடுவாரா என்ன? கட்சியின் சொத்து மூன்றாம் நபரின் கைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக, தன் மகனை வாரிசு ஆக்கி உள்ளார். இதில், மல்லை சத்யா துரோகியாம். அவர் மட்டும் வைகோ பின் செல்லாமல் தி.மு.க.,விலேயே இருந்திருந்தால், இந்நேரம் அமைச்சராகி இருப்பார். எனவே, இனியும் யோசிக்காமல், நடிகர் சரத்குமார் தன் கட்சியை பா.ஜ .,வுடன் இணைத்தது போல், முன்னாள் அ.தி. மு.க., அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், எம்.ஜி. ஆருடன் ஏற் பட்ட பிணக்கில், நம் கழகம் என்று தனிக்கட்சி ஆரம்பித்து, பின், அக்கட்சியை அ.தி.மு.க.,வுடன் இணைத்தது போல், வைகோவும் தன் கட்சியை தி.மு.க.,வுடன் இணைத்து விடலாம். இன்றைய அரசியலுக்கு வைகோ தேவை இல்லாத லக்கேஜ்!

என்ன நியாயம் செய்யப் போகிறது?

என்.ஆசைத்தம்பி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் கல்லுாரி மாணவர்களுக்குஇடையே ஏற்பட்ட காதல் பிரச்னையில், சொகுசு கார் ஏற்றி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மாணவரான, தி.மு.க., கவுன்சிலருடைய பேரனை, மேலிட நெருக்கடி காரண மாக, தி.மு.க., பிரமுகர்கள் புடைசூழ காவல் நிலையத்தில் சரணடைய வைத்துள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், மாணவர் களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் எதிர்பாராமல் நடந்த சம்பவமாக இக்கொலையை குறிப்பிட்டுள்ளனர். அரசியல் மற்றும் பண பலம் கொ ண்ட இவ் வழக்கில், விசாரணையும், நீதிமன்ற தீர்ப்பும் எப்படி இருக்கும் என்பதை இப்போதே உணர முடிகிறது. இதில், இழப்பும், வலியும், வருத்தமும் இறந்து போன மாணவருடைய பெற்றோருக்கு மட்டும் தான். கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோனவர்கள் குடும்பத்துக்கு அள்ளிக்கொடுத்த அரசு, தன் கட்சிக்காரரின் பேரனால், மகனை இழந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக் கும் மாணவனின் பெற்றோருக்கு என்ன நியாயம் செய்யப்போகிறது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஆக 04, 2025 16:42

யாரோ யாரையோ காதலிக்க, இந்த பெரியமனிதனின் பேரப்பிள்ளை கார் ஏற்றிக் கொலை செய்வாராம், அதற்கு அரசு நிவாரணம் தரவேண்டுமாம் அந்த திமுக பிரமுக்கரே தன் செல்லப்பேரணின் செயலுக்கு பிராயச்சித்தமாக ஒன்றிரண்டு கோடிகள் அந்தப் பெற்றோருக்கு கொடுக்கட்டுமே CCTV ஆதாரம் உள்ள நிலையில் இது விபத்தால், அகஸ்மாத்தாக நடந்ததாம் அரசியல் செல்வாக்கு இருந்துவிட்டால் குற்றங்கள் எல்லாவற்றுக்குமே புதுப்புது வியாக்கியானங்கள் கிளம்பிவிடும் போலிருக்கிறது


D.Ambujavalli
ஆக 04, 2025 16:35

சொந்தக்காரணங்களுக்காக நடந்த இந்தக் கொலையில் அரசு எதற்குப் பெற்றவர்களுக்கு பணம் தரணும்? அந்த திமுகக்காரரே தன் பேரன் செய்ததற்குப் பிராயச்சித்தமாக கோடிகள் கொடுக்கட்டுமே இதையே முன்னுதாரணமாகக்கொண்டு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி விட்டுக்கொண்டிருந்தான், நலமாவது, திட்டமாவது தனிநபர் கடன் சுமைதானம் மென்மேலும் அதிகமாகும்


அரவழகன்
ஆக 04, 2025 06:40

விஜய் அரசியலுக்கு பின் பலமாக மதம் ஒன்று முட்டு கொடுக்க முன் வருவதால் .... சிறுபான்மையினர் நம் சொத்து என நம்பியிருக்கும் திராவிட கட்சிக்கு பெரியார் அதிர்ச்சி தயாராகி விட்டது... விஜய் கரை சேருகிறாரா.. இல்லையோ..தி.மு.க.வுக்கு தீர கவலை போகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...