உள்ளூர் செய்திகள்

பக்க வாத்தியம்

'பன்னீர் பாட்டு...!'

சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., பாடல்களை ராகத்துடன் பாடுவது உண்டு. ஆனால், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாட்டு பாடியதில்லை. ஆனால், நிதித் துறை மானியத்துக்குப் பதிலளித்துப் பேசியபோது, அமைச்சர் பன்னீர்செல்வம், அண்ணாதுரை கதை வசனத்தில், எம்.ஜி.ஆர்., நடித்து வெளியான, 'நல்லவன் வாழ்வான்' படத்தில் வரும், 'சிரிக்கின்றார்... சிரிக்கின்றார்...' என்ற பாடலை ராகத்துடன் பாடினார்.'இந்த ஆட்சியில் மக்கள் இந்தப் பாடலைத் தான் பாடி மகிழ்ச்சியாக உள்ளனர்' என்றார். இவர் பாடுவதை சற்றும் எதிர்பாராத முதல்வர் ஜெயலலிதா, பலமாக மேஜையை தட்டி ரசித்தார். இதைப் பார்த்து, அனைவரும் மேஜையைத் தட்டினர். இதைக் கண்ட மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,வுல இருந்துட்டு, எம்.ஜி.ஆர்., பாட்டு தெரியாம இருந்தாத்தான் தப்பு...' என, 'கமென்ட்' அடித்தார்.

'எங்களுக்கும் சொல்லி இருக்கலாமே...!'

சென்னை பூம்புகாரில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவக்க விழா நடந்தது. விழாவில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பதாக, அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. நிகழ்ச்சி, மாலை ஐந்து மணிக்கு என்பதால், அனைத்து நிருபர்களும் குறித்த நேரத்திற்கு வந்து காத்திருந்தனர். நிகழ்ச்சி அரங்கிற்கு, சுமார் ஒரு மணி நேரம் கழித்து, தமிழக முதன்மை செயலர் ஷீலா ராணி சுங்கத் மற்றும் கதர் துறை செயலர் முத்து குமாரசாமியும் வந்தனர். நிருபர்கள் கூட்டத்தை பார்த்த, முதன்மை செயலர், 'அமைச்சர் சட்டசபையில் இருப்பதால், 'லேட்டா' தான் வருவார். அதனால், நானும்,'லேட்டா' வந்தேன்' என, அதிகாரி ஒருவரிடம் கிசுகிசுத்தார். இதைக் கேட்டுவிட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இந்த விஷயத்தை எங்களுக்கும் சொல்லிருந்தா, நாங்களும், 'லேட்டா' வந்திருப்போம்ல...' என சலித்துக் கொண்டார்.

'உங்க நன்றியை நினைச்சா...!'

ஸ்ரீபெரும்புதூர் எம்.பி., டி.ஆர்.பாலு சமீபத்தில் குரோம்பேட்டையில் நல சங்க நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தினார். அதில் பேசிய பல்லாவரம் நகராட்சி நல சங்க கூட்டமைப்பு தலைவர் சந்தானம், 'பிரமாண்ட மேம்பாலம், சாலை வசதி செய்து கொடுத்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிற்கு நன்றி. ஆனால், நமது எம்.பி., இதுபோன்ற கூட்டம் நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன' என்றார். அப்போது குறுக்கிட்ட டி.ஆர்.பாலு, 'நீங்க காட்டிய நன்றியில் இன்னும் என் நெஞ்சு குளிருது... நன்றி மறவாமல் இருப்பதும், நயவஞ்சகம் செய்யாமல் இருப்பதும், தமிழனுக்கு நன்று. ஒரு வீட்டில் ஒருவன் நாள் முழுவதும் தோட்ட வேலை செய்கிறான். மாலை பணி முடித்து, 200 ரூபாய் கூலி கேட்கும் போது; வீட்டுக்காரர், 100 ரூபாய் தான் தருவேன் என்றால் அவன் மனநிலை எப்படி இருக்கும். அப்படி தான் எனக்கும் இருக்கிறது' என்றார். அவரது பேச்சின் அர்த்தம் புரியாமல் பலர் விழித்தனர். விஷயமறிந்த நிர்வாகி ஒருவர், 'எம்.பி., இன்னும் சட்டசபை தேர்தல் முடிவை மறக்கல போல...' என, முணுமுணுத்துக் கொண்டு நகர்ந்தார்.

'ரிஸ்க்' எடுக்காத அமைச்சர்...!

அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்தில் சிக்கியவர்களை, மீட்புப் படையினர் மீட்டு, ரயில் தண்டவாளம் அருகில் இருந்த மண் சாலை வழியாக, ஆம்புலன்ஸ்கள் மூலம், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். விபத்து நடந்த இடத்தைப் பார்க்க, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் வந்தார். அமைச்சர் கார் வருவதற்காக, மீட்புப் பணியில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை வயல்வெளியில் நிறுத்தி, வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். விபத்து நடந்த இடம் வரை காரில் வந்த அமைச்சர், ரயில் மோதிய இடத்திற்குச் செல்ல முயன்றார். சாலைக்கும், தண்டவாளத்திற்கும் இடையே சிறிய கால்வாய் இருந்ததால், இறங்க முடியவில்லை. அங்கிருந்தவர்கள், அமைச்சருக்கு படி அமைத்துக் கொடுத்தனர். ஆனால், பள்ளத்தில், இறங்கிச் செல்வதை விரும்பாத அமைச்சர், சாலையில் இருந்தபடியே பார்த்துவிட்டு, அரக்கோணம் மருத்துவமனைக்குச் சென்று விட்டார். இதைப் பார்த்த ஒருவர், 'அமைச்சர், 'ரிஸ்க்' எடுக்க விரும்பலை போலிருக்கு...' என, 'கமென்ட்' அடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை