ரொம்பவும் பேராசைப்படாதே!
சென்னை, காசிமேடு, செரியன் நகர் மற்றும் திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் கடற்கரைகளில் சமீபத்தில், அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் இறந்து, கரை ஒதுங்கின. 'இந்த உயிரினங்களால், மனிதர்களின் உடல்களில் அரிப்பு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும்' என, செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இவை குறித்து ஆராய, சில தனியார் ஆராய்ச்சியாளர்கள், காசிமேடு மற்றும் திருவொற்றியூர் கடற்கரைகளுக்கு மறுநாள் வந்தனர். அப்போது, அங்கிருந்த குப்பையுடன், கரை ஒதுங்கிய, அரிய வகை கடல்வாழ் உயிரினங்களையும் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து, 'பளிச்'சென வைத்திருந்ததால், கடற்கரை முழுதும் சுத்தமாக காட்சியளித்தது. இதை பார்த்து, ஆராய்ச்சியாளர்கள் ஏமாந்தனர். இதை பார்த்த நிருபர் ஒருவர், 'நம்ம மாநகராட்சி எவ்வளவு வேகமா செயல்படுது பாருங்க... தினமும் இப்படி கடற்கரையை சுத்தப்படுத்தினா எவ்வளவு நல்லாயிருக்கும்...' என முணுமுணுக்க, சக நிருபர், 'ரொம்பவும் பேராசைப்படாதே...' என்றபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.