| ADDED : ஜன 22, 2025 10:28 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக, மதுரை மாவட்டம், நகரியில் ஆண்டுதோறும், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், தன் சொந்த செலவில் அன்னதானம் வழங்கி வருகிறார். இந்தாண்டு அன்னதானம் வழங்கும் பணியை பார்வையிட வந்த உதயகுமார், சமையல் கூடத்திற்குச் சென்று திடீரென, 'வடை மாஸ்டர்' ஆனார். சுடச்சுட வடை போட்டு, பக்தர்களுக்கு அவர் வழங்கியபோது, சிலர், 'பிசியான அரசியல்வாதியா இருந்தாலும், வடையும் நல்லாவே சுடுறாரே...' என, சொல்லி சிரித்தனர். இதைக் கேட்ட உதயகுமார், 'எனக்கு உண்மையான வடை தான் சுடத் தெரியும். சிலரைப் போல வெறும் வாயில் வடை சுடத் தெரியாது...' எனக் கூறி சிரிக்க, அந்த இடமே கலகலப்பானது.மூத்த நிருபர் ஒருவர், 'இன்னும் ஒரு வருஷத்துல தேர்தல் வரப்போகுதுல்ல... ஓட்டு கேட்டு போறப்ப டீ ஆத்தணும்; வடை சுடணும்... பழக்கம் விட்டுப் போகாம இருக்க, ஒத்திகை பார்க்கிறார்...' என, சிரித்தபடியே நகர்ந்தார்.