இனி மாத்தி யோசிக்கணும்!
திருப்பூர் மாநகர் மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், மனித சங்கிலி போராட்ட ஏற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசுகையில், 'மாநகராட்சி நிர்வாகம், 150 சதவீதம் வரியை உயர்த்தியும், கம்யூ., கவுன்சிலர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இஸ்ரேல் நாட்டில் போர் நடப்பதுதான் அவர்களுக்கு தற்போது கவலையாக இருக்கிறது.'திருப்பூர் மக்கள் குறித்து கவலையில்லை. தி.மு.க., கவுன்சிலர்களே தோற்றுவிடும் அளவுக்கு, மேயரையும், துணை முதல்வரையும் புகழ்ந்து தள்ளுகின்றனர். மக்களுக்கு பாதிப்பு என்றால், இனி, திருப்பூரில் நாம்தான் போராடியாக வேண்டும்' என்றார்.அக்கட்சி மூத்த நிர்வாகி ஒருவர், 'இப்படிப்பட்ட ஆளுங்கட்சி அடிமைகளை தான், நம்ம பொதுச்செயலர் பழனிசாமி, 'எப்படியும் நம்ம அணிக்கு வந்து விடுவர்'னு நினைக்கிறார்... இனியாச்சும் அவர் மாத்தி யோசிக்கணும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் அதை ஆமோதித்து தலையாட்டினர்.