பலே கில்லாடிதான் இவங்க!
முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மகளிர் காங்., சார்பில், சென்னை அம்பத்துாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர், ஹசீனா சையத் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஹசீனா சையத் பேசுகையில், 'பெண்கள் ஒன்றும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. பெண்கள், நகையை அடமானம் வைத்து அரசியல் செய்கிறோம். அதனால், நம் உரிமையை தலைவர்களிடம் நாம்தான் கேட்டு பெற வேண்டும். அதுவே நமது லட்சியம்...' என்றார். இதை கேட்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், 'இந்திராவுக்கு விழா எடுப்பதாக கூறி, தனக்கு எம்.எல்.ஏ., சீட் கேட்கும் நிகழ்வாக மாற்றி விட்டாரே... பலே கில்லாடிதான் பா இவங்க...' எனக் கூற, சக நிர்வாகிகள் சிரித்தபடியே ஆமோதித்தனர்.