இவங்க கட்சிக்கு இவர் தான்!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்த, பா.ஜ., மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர், ஹெச்.ராஜா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், 'பா.ஜ., 2026 சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கும்' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு ராஜா, 'நான், 35 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். இதுவரை கூட்டணி பற்றி பேசியது கிடையாது. எங்கள் தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும். ஆனால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை. அவர் பேசுகிற பேச்சை பார்த்தால், தனக்கு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை; ஒட்டும், உறவும் இல்லை என, பேசி விடுவரோ என, எனக்கு பயமாக இருக்கிறது. ஜெயகுமார் பேச தெரியாமல், ஏதேதோ உளறுகிறார்' என்றார்.இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'சர்ச்சைக்கும், தடாலடிக்கும் பெயர் போனவங்க எல்லா கட்சிகளிலும் இருக்காங்க...' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'இவங்க கட்சிக்கு இவர் தான்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.