த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள்
மீன்பிடி தொழிலுக்காக, 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு
சென்றனர். நள்ளிரவில் மீன்பிடித்து விட்டு, அதிகாலையில் கரைக்கு திரும்பிய
ராமேஸ்வரத்தை சேர்ந்த 18 மீனவர்களையும், விசைப்படகுகளையும் இலங்கை
கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றது அத்துமீறிய செயல்.பா.ஜ., கூட்டணியில் இவருக்கு உள்ள, 'பவருக்கு' பிரதமருக்கு ஒரு போன் போட்டா 18 பேரும் நாளைக்கே வீட்டிற்கு வந்துட போறாங்க! தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, அரசு 10 லட்சம் ரூபாய் கொடுப்பதா? கள்ளச்சாராய வியாபாரிகளிடம் இருந்து அரசு பெற்றுக் கொடுக்கட்டும்' என, சீமான் கூறியுள்ளார். கள்ளச்சாராய வியாபாரிகள் லஞ்சம் கொடுத்தது யாருக்கு? எம்.எல்.ஏ., -- எம்.பி., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பெற்ற லஞ்ச பணத்தை, அவர்களிடம் இருந்து வசூல் செய்து, இறந்தவர்கள் குடும்பத்திற்கு தரலாம். அது சரி... கள்ளச்சாராயத்தால் இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் பா.ஜ., சார்பில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தாங்களே... அது என்ன கணக்கு?முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அ.தி.மு.க., 2019ல் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து, 22 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில் வெற்றி, மற்றவற்றில் இரண்டாமிடம் பெற்றது. இந்த தேர்தலில், 36 தொகுதிகளில் போட்டியிட்டு, மொத்தத்தில் தோல்வியை தழுவியதுடன், எட்டு தொகுதிகளில் டிபாசிட் இழந்தது. நான்கு தொகுதிகளில் நான்காமிடம், 15 தொகுதிகளில் மூன்றாமிடம். இவையாவும் 40 சதவீதத்துக்கும் கூடுதல் ஓட்டு வங்கி கொண்டிருந்த அ.தி.மு.க.,இப்போது சரிபாதிக்கும் மேல் சரிந்து, 20 சதவீதம் என்ற பேரழிவை சந்தித்திருக்கிறது. இவங்க தலைவர் பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்த்தால் மட்டும், இழந்த ஓட்டுகள் திரும்ப வந்துடுமா?மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலர் ஹாருன் ரஷீத் பேட்டி: சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியது ஏற்புடையது அல்ல. கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை மாநில அரசு ஏற்பதை வரவேற்கிறோம். சாராயம் குடிச்சு இறந்த வங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிற பரந்த மனசுள்ள அரசு, பட்டாசு ஆலை தீயில் கருகி இறப்பவர்களுக்கும் தரலாமே!