பேச்சு, பேட்டி, அறிக்கை
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்தவரும், ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வுமானவைத்தியலிங்கம் பேட்டி: பழனிசாமிஉள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஒற்றை தலைமையா,இரட்டை தலைமையா என்பது அ.தி.மு.க., இணையும் போது தெரியும். 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் அ.தி.மு.க.,ஒற்றுமையாகும். 2026ம் ஆண்டுஅ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்; இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு படத்தில், கவுண்டமணி காமெடியில் சொல்றதை போல, இவர் தான் இதை தஞ்சாவூர் கல்வெட்டுக்கு பக்கத்தில் எழுதி வைக்கணும்! தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா பேச்சு: திருக்குறள், திருமூலரை மேற்கோள் காட்டி, சென்னையில் இம்மை, மறுமை பற்றி பேசிய மகாவிஷ்ணு குறித்து அமைச்சர் மகேஷ் கொந்தளித்திருக்கிறார். ஆனால், திருச்சியில் பள்ளி குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாம்சன் குறித்து கண்டுகொள்ளவில்லை. பள்ளியில் ஆன்மிகம் பேசினால் தவறு இல்லை. இதுவரை ஹிந்து விழாக்களுக்கு தடை போட்ட கும்பல், இப்போது ஹிந்து கருத்தியல்களுக்கு தடை போடுகிறது.ஓட்டு போடும் உரிமை மட்டும் இல்லைன்னா, ஹிந்துக்களை தமிழகத்தில் வாழ தகுதியில்லாதவங்களா ஆக்கிடுவாங்களோ?பா.ம.க., தலைவர் அன்புமணிஅறிக்கை: மத்திய அரசு அமைதியாக இருப்பதால், தமிழக மீனவர்களை சிறையில் அடைப்பது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது போன்ற அத்துமீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது; இதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விரைவாக தீர்வு காணும் பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.கடிதம் எழுதுறதை தவிர, வேறு எதுவுமே தெரியாத திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, எப்படி அழுத்தம் தரணும்னு இவர் ஒரு வகுப்பு எடுக்கலாம்!தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்அறிக்கை: அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழர்கள் அளித்த பூரணகும்ப மரியாதையும், ஆரத்தி எடுத்து வரவேற்றதும் சனாதன முறைப்படியான வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இருந்தாலும், தமிழர்கள் பண்பாட்டை மறக்கவில்லை.முதல்வர் மட்டும் என்னவாம்... அமெரிக்காவில் எடுத்த ஆரத்திக்கு, மனைவி கையால் பணம் கொடுத்து, பண்பாட்டை நிலை நாட்டினார் அல்லவா?