உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

மா.கம்யூ., கட்சி மாநில செயலர் சண்முகம் அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தின் கோவில் தேர் திருவிழாவில், வழிபாட்டு உரிமை குறித்த பிரச்னை எழுந்ததால், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவுக்குள், ஜாதி வெறியர்கள் புகுந்து, அவர்களை ஆயுதங்களால் தாக்கி, வீடுகளை அடித்து நொறுக்கி, வாகனங்களை எரித்துள்ளனர். பலத்த வெட்டு காயங்களுடன் எட்டு பெண்கள் உட்பட, 20-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களை தடுப்பதற்கு தமிழக அரசும், போலீஸ் துறையும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வளவு கலவரம் நடந்தும் அறிக்கையோட முடிச்சுக்கிட்டீங்களே... காம்ரேட்களின் போர்க்குணம், கூட்டணி தர்மத்துக்குள் புதைந்து போயிடுச்சோ? தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி: தமிழகத்தில், 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் திட்டம்' ஆகியவை, 2021 முதல் செயல்பாட்டில் உள்ளன. சாலை விபத்துகளில் சிக்கியவர்கள், உடனடியாக மீட்கப் பட்டு காப்பாற்றப்படுகின்றனர். இந்த திட்டத்தில், மூன்று ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் விபத்து காய சிகிச்சையை கட்டணமின்றி பெற்றுள்ளனர். அதற்காக அரசு 318.89 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இத்திட்டத்தை தற்போது மத்திய அரசு, தேசிய அளவில் அறிமுகப்படுத்தி உள்ளது.நல்ல விஷயம் தான்... அதே நேரம், மூணு வருஷத்துல, 3.57 லட்சம் பேர் விபத்துகளை சந்திச்சிருக்காங்களே... அந்த விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாமே!இந்திய ஹஜ் சங்க தலைவர் அபூபக்கர் பேட்டி: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், முஸ்லிம் ஒருவருக்காவது ஏதேனும் ஓர் இணை அமைச்சர் பதவியை பிரதமர் மோடி வழங்க வேண்டும். இதனால், முஸ்லிம்களுக்கான பிரச்னைகள் உடனுக்குடன் சரி செய்யப்படும். அமைச்சர் பதவி கொடுத்தால், 40 கோடி முஸ்லிம்கள், மத்திய அரசுக்கு கடமைப்பட்டவர்கள் ஆவோம்.இப்ப இருக்கிற போர் சூழல்ல, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் எல்லாம் இருக்குமான்னே தெரியலையே!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பேச்சு: பூத் கமிட்டியினரே, அந்தந்த பகுதி மக்களுடன் தொடர்பில் உள்ளதால், தற்போதைய தி.மு.க., அரசின் மோசமான திட்டங்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை மக்களிடம் எடுத்து கூறுங்கள். இப்போது நாம் செய்யும் பணி, தேர்தல் நேரத்தில் நம் வெற்றியை உறுதி செய்யும்.பதிலுக்கு, தி.மு.க., பூத் கமிட்டியினர் தாங்கள் செய்த திட்டங்களை பட்டியல் போடுவாங்களே... தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்பது நல்லாவே தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி