உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்., பொதுச்செயலர் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை: மக்கள், பிரிவினையை விட ஒற்றுமையையும், வெறுப்பை விட அன்பையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவினை மற்றும் வெறுப்பை விதைக்க நினைக்கும் சக்திகளை இனம் கண்டு தோற்கடிப்போம். நாட்டில் மக்களுக்கு கிடைத்த உரிமைகளை பறிக்க முயற்சிகள் நடக்கிறது. நம் அடிப்படை உரிமையான ஓட்டுரிமை கூட இன்று கேள்விக்குறியாக உள்ளது. நம் உரிமைகளை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்த வேண்டும். யாரோட ஓட்டுரிமைக்கு இப்ப என்ன பங்கம் வந்துடுச்சுன்னு இப்படி புலம்புறாரு? தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேட்டி: மக்கள் நலன் கருதி, 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற இரண்டு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 'அத்திட்டங் களின் பெயர் சட்டவிரோதமானது' என கூறி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட மூன்று பேர் வழக்கு தொடுத்தனர். சி.வி.சண்முகம் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவருக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது; அந்த பணத்தை அவர் செலுத்தி விட்டார். மீதமுள்ள இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து, அவர்கள் இருவருக்கும் தலா, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனி எல்லா திட்டங்களிலும், ஸ்டாலின் பெயர் அணிவகுத்து வரும் என்பது உறுதி! தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா பேட்டி: தமிழகத்தில், 37,000 அரசு பள்ளிகளில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் கிடையாது. கணினி அறிவியல் ஆசிரியர்கள், 60,000 பேர் தேர்ச்சி பெற்று, பணி நியமன ஆணை பெற காத்திருக்கின்றனர். நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், ஆணையை தரவில்லை. மாணவர்களை, கணினி அறிவியல் படிக்க விடாமல் இந்த அரசு வஞ்சித்து வருகிறது. 'தமிழக அரசுக்கு நிதி தராமல், மத்திய பா.ஜ., அரசு வஞ்சிக்குது'ன்னு தி.மு.க.,வினர் சொல்றாங்களே! தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தும் போது, எந்த கவலையும் இல்லாமல், முதல்வர், கூலி படம் பார்த்து கொண்டிருந்தார். அரசுக்கு எதிராக யார் வந்தாலும், அவர்கள் அடித்து நசுக்கப்படுகின்றனர் என்பதற்கு, துாய்மை பணியாளர்கள் கைது சம்பவமே சாட்சி. 'குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்' என, கருணாநிதி சொன்னது போல, தி.மு.க., அரசு வரும் தேர்தலில் தானாகவே தோல்வி அடையும். குறையை தான் எதிர்க் கட்சிகள் உணர்த்துறாங்களே... அதை காது கொடுத்து கேட்காத அரசாக அல்லவா இருக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஆக 17, 2025 15:20

ஆயிரம் கைககள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லையென்பது போல், ஆளும் கட்சி மீது ஆயிரம் குறைகள் இருந்தாலும் வலுவான எதிர்கட்சி இன்மையால் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கு...


புதிய வீடியோ