உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி: திரைப்படங்களில் வீராவேசமாக கதாநாயகர்கள் பேசுவர்; அப்படி அவர்கள் பேசுவதற்கு இயக்குநர் எழுதி கொடுத்த வசனங்கள் பயன்படும். அதை சொல்லி கொடுப்பதற்கும் உதவி இயக்குநர்கள் இருப்பர். எனவே, இயக்குநர்கள் எழுதி கொடுத்து, உதவி இயக்குநர்கள் சொல்லி கொடுத்ததை கதாநாயகன் சொல்வது போல, விஜய் அரியலுாரில் பேசி இருக்கிறார். வாரத்தில் ஐந்து நாட்கள் ஒத்திகை பார்த்துட்டு, இறுதி நாட்கள்ல பிரசாரம் செய்தால், இப்படித்தான் கிண்டல் பண்ணுவாங்கன்னு விஜய்க்கு இனியாவது புரிஞ்சா சரி! அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை: என் ஊரில், என் வீட்டுக்கு, ஒரு பிரபல நடிகர் வருகிறார் என தெரிந்தால், திரையில் பார்த்தவரை நேரில் பார்ப்பதற்கு என் வீட்டு வாசலுக்கு கூட்டம் வந்துவிடும். அதற்காக அந்த நடிகர்தான் தலைவராக, முதல்வராக வர வேண்டும் என்பது ஊர் மக்களின் விருப்பம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்த நடிகர், எல்லோரையும் ஈர்த்த எம்.ஜி.ஆரும் ஆகலாம். கூடிய கூட்டத்தை தன்வசப்படுத்த தவறிய ஏராளமான நடிகர்களின் பட்டியலில், அவரும் போய் சேரலாம். வாஸ்தவம் தான்... நடிகரை பார்க்க கூடிய கூட்டமெல்லாம் ஓட்டுகளா மாறியிருந்தால், ராம ராஜன் என்னைக்கோ முதல்வராகி இருப்பாரே! தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு: ஒரு பக்கம், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் படலம் நடந்து கொண்டு இருக்க, மற்றொரு பக்கம் இலங்கை கடற்கொள்ளையர்களும் நம் மீனவர்களை தாக்கி, அவர்களின் பொருட்களை திருடிச் செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்கள் நடக்கின்றன. வாழ்வாதாரத்திற்காக, உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 'மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும்இடி' என்பது, நம் தமிழக மீனவர் களுக்கு தான் பொருந்தும்! தி.மு.க., ஆதரவாளரான நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி: முதல்வர் ஸ்டாலின், 100 சதவீதம் சிறப்பாக பணியாற்றும் முதல்வராக திகழ்கிறார். என் மகன் அஸ்வினுக்கு மயிலாப்பூரில் சீட் கொடுத்தால் போட்டியிடுவார். தி.மு.க.,வில், அஸ்வின் இந்த மாதத்தில் இணைய இருக்கிறார். தி.மு.க.,வை எதிர்த்தால் விஜய் வெற்றி பெறலாம் என்பது தவறான கருத்து. மாதம், 5,000 ரூபாய் அளவுக்கு இலவச திட்டங்களால் பயன்பெறும், 1.50 கோடி பேரும் தி.மு.க.,விற்கு தான் ஓட்டு போடுவர். முதல்வர் ஸ்டாலினை, 'அங்கிள்' என சொல்லும் விஜய்க்கு எல்லாம் ஓட்டு போட மாட்டார்கள். 'நடிகர் விஜயை எதிர்க்க, நடிகர் அஸ்வின் தான் சரியா இருப்பார்'னு, தி.மு.க.,வுக்கு எடுத்துச் சொல்றாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
செப் 18, 2025 19:14

திமுக.,வில் பிராமணனுக்கு இதுவரை சீட் கொடுத்ததேயில்லையே சேகர். உங்க எதிர்பார்ப்பு கானல் நீர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை