பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தனியரசு பேட்டி: உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான், நடிகர்கள் நாடாள தகுதியானவர்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகளை உண்மையென நம்பும் அறியாமை, தமிழர்களிடம் மட்டுமே உள்ளது. அந்த நம்பிக்கையில் தான், நடிகர் விஜயும் முதல்வர் கனவோடு களம் இறங்கியிருக்கிறார். ஆந்திராவில் என்.டி.ராமாராவ், தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., தவிர, வேற எந்த நடிகராலும் முதல்வராக முடிஞ்சுதா...? விஜய் கனவும் கானல் நீராகவே முடியும்! அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை: தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி காலங்களில், ஹிந்து அறநிலைய துறையில் பல்வேறு சரித்திர சாதனைகள் படைக்கப்பட்டன. தற்போது, 'ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதற்காக, அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என, கேரள ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்காக அவசர கோலத்தில், பணிகள் சரியாக முடியாமல் பல கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது' என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அண்ணாதுரையின் வழி வந்தவங்களே, கேரள ஜோதிடர்களை தேடி போயிட்டாங்க என்றால், அவங்க செயல்படுத்திய திட்டங்கள் மீது அவங்களுக்கே நம்பிக்கையில்லையோ? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: 'நிழ லின் அருமை வெயிலில் தெரியும்' என்பது போல, அ.தி.மு.க., ஆட்சியின் நன்மைகளை மக்கள் உணர துவங்கி விட்டனர். தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக, 2026 சட்டசபை தேர்தல் இருக்கும். இரண்டாவது இடத் தை பிடித்து, எதிர்க்கட்சியாக யார் வருவது என்பதில்தான் தி.மு.க.,வுக்கும், த.வெ.க., வுக்கும் போட்டி நடக்கிறது. 'தி.மு.க.,வுக்கும், த.வெ.க., வுக்கும் தான் போட்டி' என்ற விஜய் முழக்கத்தை வச்சே, அவரை கலாய்க்கிறாரே! தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: இந்திய தலைமை கணக்காயர் அலுவலகம் நடத்திய ஆய்வில், உபரி வருவாய் ஈட்டுவதில் உ.பி., முதல் இடத்தையும், தமிழகம், 27வது இடத்தையும் பிடித்திருக்கிறது. மொத்தமுள்ள, 28 மாநிலங்களில், 27வது இடத்தை பிடித்ததில் இருந்தே, தி.மு.க., அரசு எந்த லட்சணத்தில் ஆட்சி நடத்து கிறது என்பது தெளிவாக தெரிகிறது. உபரி வருவாய் ஈட்டுவது தொடர்பாக, உ.பி., குஜராத் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களை பார்த்து தி.மு.க., அரசு கற்றுக்கொள்ள வேண்டும். பா.ஜ., அரசிடம் தான் பாடம் கத்துக்கணும் என்றால், அந்த உபரி வருவாயே வேண்டாம்னு சொல்லிடுவாங்க!