உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் பேட்டி: கரூரில் த.வெ.க., கூட்டத்தில் நடந்த சம்பவம் துயரமானது. என் மாமியார் இறந்து விட்டதால், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை, உடனடியாக சந்திக்க முடியவில்லை. துயரமான இந்த நேரத்தில், நடந்த சம்பவம் குறித்து கருத்து கூற முடியாது. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் விசாரித்த பிறகுதான், இதுபற்றி பேச முடியும். கரூர் சம்பவம் நடந்ததுமே, 'விஜய் தான் முழு பொறுப்பேற்கணும்' என்று ஆவேசமாக அறிக்கை விட்ட இவர், இப்ப அடக்கி வாசிப்பது கூட்டணிக்காகவா என்ற கேள்வி எழுதே!தமிழக பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன் பேட்டி: கடந்த, 2009ல் சென்னை தீவுத்திடலில், காங்., முன்னாள் தலைவர் சோனியா பங்கேற்ற கூட்டம் நடந்தது. மேடைக்கு திருமாவளவன் வந்தார். அங்கிருந்த சிறப்பு பாதுகாப்பு படை எஸ்.ஐ., 'திருமாவளவனை மேடையில் ஏற்ற முடியாது' என்றார். அப்போது, காங்கிரசில் இருந்த நான், குலாம்நபி ஆசாத்திடம் கூறி, அவர் டில்லிக்கு தகவல் அனுப்பி, அரை மணி நேரம் கழித்து தான் அனுமதி கிடைத்தது. அன்று, சிறப்பு பாதுகாப்பு படை எஸ்.ஐ.,யையே சமாளிக்க முடியாத திருமாவளவன், பிரதமர் மோடியின், 'கான்வாயை' தடுக்க முடியுமா? இவ்வளவு பேசும் இவரே, ஜெ., ஆட்சி காலத்தில் அவங்களை முறைச்சுக்கிட்டு, ஆறு மாசம் தலைமறைவாகலையா? தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'பாக்ஸ்கான் நிறுவனத்தின், 15,000 கோடி ரூபாய் முதலீடு உறுதியானது; அதன் வாயிலாக, 1,000 பேருக்கு வேலை கிடைக்கும்' என்று தமிழக அரசு மார்தட்டியது. தொழில் துறை அமைச்சர் ராஜா, பொய் பேசலாம்; ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என, சொல்வர். அதற்கு ஒரு நாள் கூட இடமில்லை என்பது தெளிவாகி விட்டது. தி.மு.க.,வின் நான்கரை ஆண்டு ஆட்சியில் வந்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து, மத்திய அரசே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடலாமே! தமிழக காங்., பொதுச்செயலர் கே.ஜி.ரமேஷ்குமார் அறிக்கை: கார்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 28ல் இருந்து, 18 சதவீதமாக குறைத்துள்ளது பா.ஜ., அரசு. இதுவரை மாற்றுத்திறனாளிகள் கார்கள் வாங்கும் போது, அவர்களுக்கு, 10 சதவீதம் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இப்போது, அனைத்து தரப்பு மக்களுக்கும் வரி குறைப்பை காரணம் காட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான ஜி.எஸ்.டி., குறைப்பை ரத்து செய்துள்ளது பா.ஜ., அரசு. மாற்றுத்திறனாளிகள் விஷயத்தில் பா.ஜ., அரசு பாரபட்சம் காட்டுவது ஏன்? மாற்றுத்திறனாளிகள் பெயர்களில் கார்களை வாங்கி, பலரும் முறைகேட்டில் ஈடுபட்டதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ