பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர், டாக்டர் சரவணன் அறிக்கை: மதுரை மாநகராட்சிக்கு, கடந்த ஐந்து ஆண்டு பட்ஜெட்டில் மொத்தம், 6,208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில், 100 வார்டுகள் உள்ளன. இதில், பல வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படவில்லை; சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன; தெரு விளக்குகள் இல்லை என்பது போன்ற அடிப்படை பிரச்னை களால் மக்கள் தவிக்கின்றனர். ஆகவே, அரசு ஒதுக்கிய நிதியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து, முழுமையான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அரசு ஒதுக்கிய, 6,208 கோடி ரூபாயில், கணிசமான தொகையை சிலர், 'ஒதுக்கி'ட்டாங்கன்னு சொல்லாம சொல்றாரோ? மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: நீதித் துறை மீது ஹிந்துத்துவ சக்திகள் தாக்குதல் நடத்துவதை எதிர்த்து, வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வழக்கறிஞர்களின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும் வகையில், நிகழ்வுகள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பார் கவுன்சில் அலுவலகத்தில், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது முற்றிலும் ஏற்புடையதல்ல. திருமாவளவனையும், அவரது கட்சியினரையும் வெளிப்படையா கண்டிக்காம, பூசி மெழுகுறாரே! தமிழக, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர், ஜி.கே.நாகராஜ் பேச்சு: கடலுார் மாவட்டம், வேப்பூரில் வயலில் களை எடுத்த நான்கு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, 1 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானது அல்ல. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கும், கரூரில் நடிகரை காண வந்து உயிரிழந்தோருக்கும், 10 லட்சம் ரூபா ய் வழங்கப் பட்டது. விவசாய பணியில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு, தலா, 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தனி மனித தவறுகளுக்கு நிவாரணத்தை அள்ளி தர்றவங்க, இயற்கை சீற்றமான மின்னல் தாக்கியதற்கு, கிள்ளி கொடுப்பது முறையல்ல! அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி பேட்டி: அ.தி.மு.க., அடுத்த ஆண்டு, 55வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது, அந்த கட்சி இருக்குமா என்ற கேள்வி எழுந்து, கட்சியே தொய்வான நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. அதன் பொதுச் செயலர் பழனிசாமி, ஒற்றுமை முயற்சிக்கு வரவில்லை என்றால், தொண்டர்கள் மத்தியில், மாபெரும் புரட்சி வெடிக்கும். இவரால ஒரு பொட்டு வெடியை கூட வெடிக்க முடியாது... இதுல, எங்க இருந்து புரட்சியை வெடிக்க வைக்க போறாரு?