உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு பேட்டி அறிக்கை

 பேச்சு பேட்டி அறிக்கை

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு: மத்திய அரசோடு சண்டை போட்டு, பிரதமர் வந்தால் கூட வரவேற்க வராமல் இருப்பவர்களுக்கு தோல்வி தான் மிஞ்சும் என்பதை, பீஹார் தேர்தல் சொல்லியுள்ளது. பீஹார் தேர்தல் முடிவு, வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்திலும் வாரிசு அரசியலை துாக்கியடிக்க மக்கள் காத்திருக்கின்றனர். காங்கிரஸ் எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கூட்டணி படுதோல்வியை சந்திக்கும். ராமதாசின் பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு தவம் கிடக்கின்றன... இதனால், எந்த கட்சியை கழற்றி விடலாம்னு தி.மு.க., யோசித்தால், முதலிடத்தில் காங்., இருக்கும் போலிருக்கே! ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எது எப்படி இருந்தாலும், வெற்றி பெற்றவர்களை பாராட்டுவது தான், அரசியலில் ஆரோக்கியமானது. பீஹார் தேர்தல் முடிவுகளை பார்த்து, தமிழகத்தில் தி.மு.க.,வை எதிர்க்கும் கூட்டணி கட்சிகள், 'நாமும் வெற்றி பெற்று விடலாம்' என மனப்பால் குடிக்கலாம்; கனவு கோட்டைகளை கட்டலாம். ஆனால், ஒன்றும் நடக்காது. 'தி.மு.க.,வினரின் பண பலத்துக்கு முன்னாடி, எதிர்க்கட்சிகள் நிற்கவே முடியாது'ன்னு சொல்ல வர்றாரோ? பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, மேகதாது அணை கட்ட நினைக்கிறது கர்நாடக அரசு. மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி டெல்டாவில் விவசாயம் பாதிக்கப்படும்; 20 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, 'மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என கருதி, தமிழக அரசு அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கர்நாடகாவில் தி.மு.க., கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி தான் நடக்குது... அதனால, அக்கட்சியின் தேசிய தலைமையிடம் பேசி, மேகதாது முயற்சிக்கு இப்பவே தடுப்பணை போடணும்! தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், அக்கட்சி இயங்கி வருகிறது; அது உடையவில்லை. செங்கோட்டையன் மட்டும் வெளியே போய் விட்டார். பா.ஜ., கூட்டணியில் இருந்த தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் அவர்களாக விலகி விட்டனர்; நாங்கள் விலக்கவில்லை. இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து, காலம் தான் முடிவு செய்ய வேண்டும். அவங்க தான், 'பழனிசாமி இருக்கும் பக்கம் தலைவச்சு கூட படுக்க மாட்டோம்'னு சொல்லிட்டாங்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி