பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, சமஸ்கிருத மொழியை செத்த மொழி என, மோசமான முறையில் விமர்சித்துள்ளார். சுயநல அரசியலுக்காக, தன்னை தானே இயக்கி, நடித்து, பிரிவினைவாத அரசியல் பேசி, மக்களை குழப்பி வரும் தி.மு.க.,வின் ஊதுகுழலாக செயல்படும், செபஸ்டியன் சைமன் எனும் சீமான் போல, உதயநிதியும் நடந்து கொள்வது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. 'எந்த மதம் மற்றும் மொழியை தவறான முறையில் விமர்சித்து பேசக்கூடாது' என, உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். இவர் வேற... இந்த மாதிரி பேசியதற்காக, 'கருணா நிதியின் கொள்கை வாரிசு'ன்னு சொல்லி, உதயநிதிக்கு பாராட்டு விழா எடுக்காம இருப்பதே பெருசு! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: எம்.ஜி.ஆர்., பெயரை உச்சரிக்காமல் யாராலும் அரசியல் நடத்த முடியாது. அதனால்தான் த.வெ.க., தலைவர் விஜயும் எம்.ஜி.ஆர்., பெயரை உச்சரித்திருக்கிறார். ஆனால், அவர் இடத்திற்கு வேறு யாராலும் வர முடியாது. மக்கள் மனதில் இன்றும் எம்.ஜி.ஆர்., வாழ்ந்து வருகிறார். தமிழகத்திற்கு ஒரே அண்ணாதுரை, ஒரே எம்.ஜி.ஆர்., ஒரே ஜெய லலிதா தான். ஆனா, அ.தி.மு.க., மட்டும் தான் ஒன்றாக இல்லை... பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன்னு பல அணிகளா பிரிஞ்சு கிடக்குது! பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேச்சு: தமிழகத்தில் இப்போது, போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் மதுவுக்கும், சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கும் அடிமையாகி வருகின்றனர். போதை பழக்கம் இல்லாத, நல்ல ஆண் பிள்ளைகளை கண்டறிந்து, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சவாலாகி வருகிறது. முன்னாடி, கிராமங்கள்ல மது குடிக்கிறவனை தீண்டத்தகாதவர் போல பார்த்த காலம் எல்லாம் இப்ப மலையேறிடுச்சு! தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: ஹிட்லரின் மந்திரி சபையின் கொள்கை பரப்பு செயலர் ஜோசப் கோயபல்ஸ் இறந்து, 80 ஆண்டுகளா கின்றன; அவரது வாரிசுகள் இன்னும் தமிழகத்தில் இருக்கின்றனர். 'ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல், ஆயிரம் முறை சொல்; மக்கள் நம்பி விடுவர். அந்த பொய்யை பாடலோடு, இசையோடு, திரைப் படமாக சொல். அது இன்னும் அதிக, 'ரீச்' ஆகும்' என்பது தான் திராவிட மாடல். கோவை மெட்ரோ ரயில் திட்ட விவகாரத்திலும், தி.மு.க.,வினர் இதையே தான் செய்கின்றனர். மத்திய பா.ஜ., அரசு மீது முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாமல் தான், இந்த மாதிரி சின்ன விவகாரங்களை பெருசாக்குறாங்க!