உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: இன்றைய சூழ்நிலையில், தி.மு.க.,வுக்கு மாற்றாக அ.தி.மு.க.,வைத் தான் மக்கள் பார்க்கின்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றாக முன்னாள் முதல்வர் பழனிசாமியைத் தான் பார்க்கின்றனர். ஸ்டாலின் வேண்டாம் என, மக்கள் முடிவு எடுக்கும்போது, பழனிசாமி வேண்டுமென்று இரட்டை இலைக்கு தான் ஓட்டளிப்பர். இதுதான் மக்களுடைய தீர்ப்பாக, அடுத்தாண்டு நடக்கவுள்ள தேர்தலில் அமையப் போகிறது. 'ஸ்டாலினும் வேண்டாம்; பழனிசாமியும் வேண்டாம்'னு நினைக்கிற இளைஞர் கூட்டம், விஜய் கட்சி பக்கம் போறதை இவர் கவனிக்கலையோ? முன்னாள் அமைச்சரும், கரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான செந்தில் பாலாஜி பேட்டி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க., தலைமையுடன் ஏற்பட்ட பிரச்னையால், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். இதற்கு முன்பு வரை, முதல்வராக யார் வருவார் என்று அவர் சொன்னார்; தற்போது வேறு ஒருவரை முதல்வராக வருவார் என்று சொல்கிறார். யார் எங்கு போனாலும், அதை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. முதல்வர் யார் என, மக்கள் தீர்மானித்து விட்டனர். இரண்டாவது முறையாக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார். இவரும், 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வில் இருந்தப்ப, 'ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது'ன்னு சொன்னவர் தானே! திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை பேட்டி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு மூத்த அரசியல்வாதி. அ.தி.மு.க., என்ற மிகப்பெரிய இயக்கத்தில் இருந்து த.வெ.க.,வுக்கு சென்றுள்ளார்; அது புதிய கட்சி. அங்கு செங்கோட்டையனுக்கு எப்படிப்பட்ட அங்கீகாரம் கொடுத்து, அவரை செயல்பட வைக்கப் போகின்றனர் என்பது போக போகத்தான் தெரியும். இவங்களும் திராவிட கட்சிதானே நடத்துறாங்க... இவங்க கட்சியில் சேரலாம்னு செங்கோட்டையனுக்கு தோணலையே! தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு: எத்தனை தடைகள் முன் நின்றாலும், பீனிக்ஸ் பறவை போல தே.மு.தி.க., பயணித்துக் கொண்டே இருக்கிறது. தொண்டர்கள் விரும்பும் கூட்டணி தான் அமையும்; நாம் இடம் பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். தமிழக அரசியலில் இதுவரை பார்க்காத அதிசயம், 2026ல் நடக்கும். கூட்டணி அமைச்சரவை தான் அமையும்; அதில் நாம் இருப்போம். தி.மு.க., - அ.தி.மு.க., ரெண்டு கட்சிகளுமே, 'கூட்டணி அமைச்சரவை கிடையாது'ன்னு தெளிவா சொல்லிட்டாங்களே... கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்ட விஜய் கட்சியுடன் கைகோர்க்க போறாங்களோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை