உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மஞ்சள் பூசணி சாகுபடியில் ரூ.80,000 லாபம்!

மஞ்சள் பூசணி சாகுபடியில் ரூ.80,000 லாபம்!

இயற்கை முறையில், மஞ்சள் பூசணி சாகுபடி செய்து வரும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முருகன்:கடையநல்லுாரில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலாண்டனுார் கிராமத்தில் அமைந்துள்ளது, என் தோட்டம். எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். அதுக்குப் பின், அப்பாவுக்கு ஒத்தாசையாக விவசாயத்தில் இறங்கிட்டேன்.இது தான் எங்க குடும்பத்தோட பூர்வீக தொழில். நெல், பருத்தி, காய்கறிகள் தான் எங்க பகுதியோட முதன்மையான பயிர்கள்.கடந்த ஐந்து ஆண்டு களுக்கு முன்னாடி, கடையநல்லுார் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் நடந்த இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்பில் கலந்துக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. எங்க வட்டாரத்தில் இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வரும் இரண்டு விவசாயிகளோட தோட்டங்களுக்கு களப்பயிற்சிக்காக அழைச்சுட்டு போனாங்க.அதில் ஒரு விவசாயி, மஞ்சள் பூசணி சாகுபடி செஞ்சிருந்தார். கொடிகள் நல்லா செழிப்பாக,வும் காய்கள் திரட்சியாகவும் இருந்தன. இதில் நல்ல லாபம் கிடைத்தது என அந்த விவசாயி சொன்னதால், எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு, மஞ்சள் பூசணி பயிர் செய்ய துவங்கினேன். அதிக பராமரிப்பு இல்லாமலே, குறுகிய காலத்தில் கணிசமான வருமானம் தரக்கூடிய பயிர் இது.எனக்கு, 3 ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கரில் மஞ்சள் பூசணி சாகுபடி செய்றது வழக்கம். மீதி பரப்பில் உளுந்து, பச்சைப்பயறு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கிறேன். இந்த முறை சாகுபடி செஞ்சிருக்குற மஞ்சள் பூசணியில் இப்ப தான் காய்கள் அறுவடைக்கு வர துவங்கியிருக்கின்றன.தலா 10 நாட்கள் இடைவெளியில் நாலு தடவை காய்கள் அறுவடை செய்யலாம். கடந்த ஆண்டு 1 ஏக்கரில், 8,100 கிலோ காய்கள் மகசூல் கிடைச்சது. அதில், 500 கிலோ காய்கள் விற்பனைக்கு ஏற்ற தரத்தோடு இல்லை. நல்ல தரமான காய்கள், 1 கிலோவுக்கு குறைஞ்சபட்சம், 8 ரூபாயில் இருந்து அதிகபட்சம், 32 ரூபாய் வரைக்கும் விலை கிடைச்சுது. ஒரு கிலோவுக்கு சராசரியாக 14 ரூபாய் வீதம் விலை கிடைத்தது. 7,600 கிலோ காய்கள் விற்பனை செய்தது வாயிலாக, 1 லட்சத்து, 6,400 ரூபாய் வருமானம் கிடைத்தது.உழவு முதல் அறுவடை வரைக்கும், 26,400 ரூபாய் செலவாச்சு. மீதம், 80,000 ரூபாய் லாபமாக கிடைத்தது.எங்க மாவட்டத்தில் தென்காசி காய்கறி சந்தையிலயும், பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட சந்தைகளிலும் காய்களை விற்பனை செய்றேன். கடந்த ஆண்டு கிடைச்சதை விடவும், இந்த ஆண்டு கூடுதலாக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.தொடர்புக்கு:முருகன்:97866 88646.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ