உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / 20 சென்ட் பரப்பில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்!

20 சென்ட் பரப்பில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் லாபம்!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில், பல ஆண்டுகளாக மல்லிகைப் பூ சாகுபடி மற்றும் அதன் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டு வரும், விவசாயி சரவண குமார்: நான் பொறியியல் பட்டதாரி. மல்லிகை விவசாயத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, முழுநேர மல்லிகை விவசாயியாக மாறினேன்.இப்பகுதியில் உள்ளோர் முதலில் வெற்றிலை சாகுபடியில் தான் ஈடுபட்டனர். அதில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கடுமையான நஷ்டத்தை சந்தித்தனர். அதனால், அதை கைவிட்டு மாற்றுப்பயிர் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தனர்.அப்போது, என் தாத்தா கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தை அணுகி ஆலோசனை கேட்டதற்கு, 'மல்லிகை சாகுபடியில் நிறைய லாபம் பார்க்கலாம். வெற்றிலையை ஒப்பிடுகையில், இதில் பூச்சி, நோய் தாக்குதல் வாய்ப்பு மிகக் குறைவு' என்றனர்.சோதனை முயற்சியாக மல்லிகை பயிர் செய்து பார்த்தார். வெற்றிகரமான விளைச்சலுடன், லாபமும் கிடைத்ததால், அக்கம் பக்கத்து விவசாயிகளும் மல்லிகை சாகுபடியில் ஈடுபட ஆரம்பித்தனர்.அதன்பின், மல்லிகை நாற்றுகள் உற்பத்தியிலும் ஈடுபட துவங்கினர். இப்பகுதியில் உள்ள மண் வாகு, தண்ணீர் வளம், தட்ப வெப்பம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும், நல்ல தரமான நாற்று உற்பத்திக்கு உறுதுணையாக இருக்கிறது.நாங்கள், 2 ஏக்கரில் தாய்ச்செடிகள் வளர்த்து வருமானம் பார்த்து வருகிறோம். பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக, முக்கால் அடி ஆழத்துக்கு மண்ணை நல்லா புரட்டி, பொலபொலப்பாக்கி போதுமான அளவு தண்ணீர் கொடுத்து, நாற்றங்காலை பக்குவப்படுத்தினாலே போதும்... இயற்கை உரங்களும் அதிகம் தேவைப்படாது.பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால், வேப்ப எண்ணெய் கரைசல் தெளிப்போம். 20 சென்ட் பரப்பில், 2 லட்சம் விதைக்குச்சிகள் நடவு செய்வோம். நெருக்கமாக நடலாம்.வேர் பிடித்து வளர்ந்து, 5 - 6 மாதங்களில் தரமான மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு தயாராகும். ஒரு நாற்று, 3 ரூபாய் என விற்பனை செய்வோம். இரண்டு லட்சம் நாற்றுகள் வாயிலாக, 6 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.நாற்றங்கால் தயாரிப்பு, தாய்ச்செடிகளில் இருந்து கிளைகளோட தலைப்பகுதியை நறுக்கி, அதை நாற்றங்காலில் பதியம் போடுவதற்கான ஆள் கூலி, பந்தல் அமைப்பதற்கான செலவு, தினமும் இரண்டு வேளை தண்ணீர் தெளிப்பு, விற்பனைக்கு தயாரான நாற்றுகளை வேரோடு பிடுங்குவதற்கான ஆள் கூலி என, 3 லட்சம் ரூபாய் செலவு போக, மீதி 3 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.மொத்தம் 20 சென்ட் பரப்பில் ஆண்டுக்கு இரண்டு முறை நாற்றுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்தால், 6 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம். மழை, வெயில், கடும் பனி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருந்தால், நிறைவான லாபம் நிச்சயம்!தொடர்புக்கு: 94430 12716


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்