பால் தொழில் ரகசியம் நிறைந்தது!
கும்பகோணம் அருகே குறிச்சியில் செயல்படும், 'ஜி.கே. டெய்ரி லிமிடெட்' நிறுவனத்தின் செயல் இயக்குனர் கே.தியாகராஜன்:எங்கள் குடும்பம், பரம்பரையாகவே விவசாய குடும்பம். விவசாயம் மட்டுமே செய்து வந்த அப்பாவுக்கு எப்படியோ பிசினசில் ஆர்வம் வந்தது. இதன்படி பால் வியாபாரம் செய்யும் தொழிலை, 1976ல் ஆரம்பித்தார். முதலில், 10 லிட்டர் கேனில் பால் வியாபாரம் துவங்க, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அடுத்த சில ஆண்டுகளில் கும்பகோணத்திற்கு சென்று பால் வியாபாரம் செய்யும் அளவுக்கு உயர்ந்தார்; அதற்கு, 'தமிழ் பால்' எனவும் பெயர் வைத்தார்.நான், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு, 2004ல் அப்பாவுடன் சேர்ந்து பிசினஸ் செய்ய ஆரம்பித்தேன். 2008ல் அதிக அளவு பால் கொள்முதல் செய்தோம்; அவ்வளவு பாலையும் எங்களால் பயன்படுத்த முடியவில்லை. அதனால், மதிப்பு கூட்டல் வாயிலாக மீதமான பாலில் வெண்ணெய் எடுத்து, நெய் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தர ஆரம்பித்தோம்.பால் தொழில், ரகசியம் நிறைந்தது. ஒரு நிறுவனம் பின்பற்றும் தொழில்நுட்பத்தை, இன்னொரு நிறுவனத்துக்கு அவ்வளவு எளிதில் சொல்லி விடாது. அந்த நிலையில், பால் பண்ணை தொழிலில் புதிய தொழில்நுட்பத்தை அறிய வேண்டும் எனில், இந்தியா முழுக்க நடக்கும், 'டிரேட் பேர்'களுக்கு செல்வதே ஒரே வழி.நான் இந்தியா முழுக்க நடந்த டிரேட் பேர்களுக்கு சளைக்காமல் சென்றேன். அங்கு தொழில்நுட்பங்களை தரும் நிறுவனங்கள், 'ஸ்டால்' அமைத்திருப்பர். அந்த தொழில்நுட்பம் ஏதாவது ஒரு ஆலையில் பயன்படுத்துவதை பார்க்க வேண்டும் என்று கேட்டால், அவர்களே நம்மை அழைத்து சென்று காட்டுவர். இப்படி ஆங்காங்கே பார்த்த தொழில்நுட்பங்களை, முடிந்த வரை எங்கள் பிசினசில் கொண்டு வந்தோம்.தற்சமயம் தினமும், 68,000 லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். இதில், 40,000 லிட்டர் பாலாகவும், 10,000 லிட்டர் தயிராகவும், மீதமுள்ள பாலை பனீர், நெய், பால்கோவா, 'மில்க் ஷேக்' என, விற்பனை செய்கிறோம். இன்றைக்கு எங்களிடம், 63 பிரான்சைஸ்களும், 40 டிஸ்ட்ரிபியூட்டர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு நல்ல மார்ஜின் தருவதால், எங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.எங்கள் நோக்கம் வேகமான வளர்ச்சி என்பதல்ல; நிதானமான, நிரந்தரமான வளர்ச்சி தான். காரணம், கடனுக்கு பொருளை தருவதில்லை. உடனுக்குடன் பணம் தந்தால் தான், புராடக்ட்டுகளை தருகிறோம். அப்படி செய்தால் தான் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் தரமுடியும். ஏஜன்சிகளிடம் வாங்காமல், விவசாயிகளிடமே நேரடியாக பால் கொள்முதல் செய்கிறோம்.