உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / சிட்டு குருவிகள் தங்குவதற்கு கூடு செய்கிறோம்!

சிட்டு குருவிகள் தங்குவதற்கு கூடு செய்கிறோம்!

சிட்டு குருவிகளுக்கான கூடுகளை அமைத்து தரும், 'கூடு' என்ற அமைப்பை நடத்தும், சென்னை ராயபுரம் ஆதன் தெருவை சேர்ந்த கணேசன்:எம்.டெக்., மெக்கானிக்கல் இன்ஜி., முடித்துள்ளேன். சொந்த ஊர் கிருஷ்ணகிரி அருகே உள்ள தளியூர். ஆடுகள் தான் எங்கள் வாழ்வாதாரம். எங்கள் பெரியப்பா, எங்கெல்லாம் தரை தெரியுதோ அங்கெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வைப்பார். 'இந்தப் பச்சை இருக்கிறவரை தாண்டா நாமெல்லாம்' என்று சொல்வார். அவரைப் பார்த்து தான் இயற்கை, சூழலியல் குறித்து ஆர்வம் வந்தது. ஸ்ரீபெரும்புதுார் கல்லுாரி ஒன்றில், எம்.டெக்., படித்த போது, என்னை சிட்டுக்குருவி பக்கம் திருப்பியவர், என் பேராசிரியர் முருகவேல். 'எந்த அளவுக்கு சிட்டுக்குருவிகள் குறைஞ்சிருக்கோ, அந்த அளவு தவறான வாழ்க்கை வாழ்கிறோம்' என்றார். வார விடுமுறைகளில் குருவிகளின் இயல்புக்கு பொருந்துற மாதிரி கூடுகள் செய்து வைக்கலாம் என்று தோன்றியது. கார்பென்டரிடம் பேசி, ஒன்று 250 ரூபாய் என முடிவு செய்து, கூடுகள் தயாரித்தோம். உடன் படிக்கும் மாணவர்களுடன், வாரா வாரம் கூடுகளை சிட்டுக்குருவிகள் வரும் இடங்களாக பார்த்து, நாங்களே வைக்க ஆரம்பித்தோம். ஆனால், ஒரு நாளைக்கு நான்கு இடங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை.இதில் இரண்டு பிரச்னைகள் வந்தன. ஒன்று செலவு, நண்பர்கள் 'சப்போர்ட்' செய்தாலும் பெரிய தொகை தேவைப்பட்டது. அடுத்து, இதை நாம் மட்டுமே செய்வது சரியில்லை என தோன்றியது. அதனால், முதலில் ராயபுரத்தில் உள்ள ஒரு பள்ளியை தொடர்பு கொண்டேன். அவர்கள் வகுப்பறையை கூடுகள் செய்வதற்கு ஆய்வுக்கூடமாக கொடுத்தனர். தேவையான, 'மெட்டீரியல்' மற்றும் கருவிகளை நாங்களே வாங்கினோம். பின், ஒவ்வொரு பள்ளியாக செல்ல ஆரம்பித்தோம். இதை கேள்விப்பட்டு பலர் இணைந்தனர்; பொருளாதார உதவிகள் கிடைத்தன.மாணவர்களுக்கு, மெட்டீரியலை தந்து அரை மணி நேரம் பயிற்சி தருவோம். அழகாக கூடு செய்து விடுவர். கூடு கட்ட இடம் கிடைத்தால் தான் சிட்டு குருவிகள் இணை கூடவே செய்யும். அதிகபட்சம் ஐந்து முட்டையிடும்; எல்லாமே பொரித்து, ஒரு மாதத்திற்குள் பறக்க ஆரம்பித்து விடும். அதன்பின் சிறிது நாட்களுக்கு அந்த கூட்டுக்கு வராது. கூடு எடுத்துச் செல்லும், மாணவ - மாணவியர் சிட்டுக்குருவிகள் உள்ளே வந்தவுடனே சந்தோஷமாக புகைப்படம் எடுத்து அனுப்புவர்.தற்போது கண்ணகி நகர், வேளச்சேரி பகுதிகளில் கூடு வைக்கும் வேலையை துவக்கி உள்ளோம். சென்னை முழுதும், ஒரு லட்சம் கூடுகள் வைக்க வேண்டும். அது தான் எங்கள் இலக்கு. எங்கள் காலத்திற்குள் சிட்டுக்குருவிகள் நிறைந்த ஊராக சென்னையை மாற்ற வேண்டும்!தொடர்புக்கு: 95006 99699


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை