உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / எங்கள் நடனங்களுக்கு பிரபலங்களும் லைக் போடுகின்றனர்!

எங்கள் நடனங்களுக்கு பிரபலங்களும் லைக் போடுகின்றனர்!

'நெல்லை மொக்க பாய்ஸ்' என்ற பெயரில் ரீல்ஸ்கள் போட்டு அசத்தும், நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த, மூதாட்டிகள் சொர்ணம், 75, மற்றும் 80 வயது சொல்லமாட்டி.சொர்ணம்: என் கணவர் இறந்து, 27 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகளும், இரு மகன்களும் இருக்கின்றனர். ஆரம்பத்தில், ஊர் பசங்க வீடியோ எடுக்க கூப்பிட்டபோது, விளையாட்டாக தான் ஆடிப்பாடினோம். இப்போது என்னவென்றால், எங்களோட வீடியோ பார்த்த பலர் பாராட்டி, எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.குமரி பெண்ணாக இருந்தபோது, கண்ணாடியில் கூட என் முகத்தை பார்த்தது கிடையாது. இப்போது, 'நாமா இவ்வளவு அழகாக நடிக்கிறோம்' என்று ஆச்சரியமாக இருக்கிறது. நடிகையர் மாதிரி சுடிதார், ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து நாங்கள் செய்யும் வீடியோக்களை பார்க்கும்போது அம்புட்டு சந்தோஷமாக இருக்கிறது.எங்கள் பேத்திகளின் உடைகளை போட்டு ஆடும்போது, 'எங்களுக்கே போட்டியா' என்று அவர்கள் சொல்கின்றனர். அப்போது எங்களுக்கு சிரிப்பாக இருக்கும். ஆரம்பத்தில் வெட்கமாக இருந்தது; இப்போது, கேமரா இருப்பதையே மறந்து விடுகிறோம். வீடியோவில் கூட வருவோர் அன்பாக பேசி, ஆறுதலாக இருப்பதுடன், சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க; பிடிச்சதை நல்லா சாப்பிடுகிறோம்.ஆரம்பத்தில், ஊருக்குள்ள மட்டும் தான் எங்களை தெரிய ஆரம்பித்தது; இப்போது எங்கு போனாலும் கண்டுபிடித்து விடுகின்றனர். ரொம்ப பெருமையாக இருக்கிறது. ஆரம்பத்தில், 10 டேக் வரை வாங்குவோம். இப்போது இண்டு டேக்கிலேயே, 'ஓகே' செய்து விடுகிறோம்.சொல்லமாட்டி: என் பையன், ஆரம்பத்தில், 'இதெல்லாம் வேண்டாம்' என, சொன்னான். நான் அவனுக்கு தெரியாம போய் தான் வீடியோ பண்ண ஆரம்பித்தேன். இப்போது, அவனே சந்தோஷமாக அனுப்பி வைக்கிறான். தலைக்கு, 'விக்' வைத்து நடிக்கும்போது இளமையாக தெரிகிறோம்; வயதும் குறைந்த மாதிரி இருக்கிறது.என் கணவர் எப்போதோ இறந்து விட்டார். பிள்ளைகள் இருந்தாலும், கணவருடன் பேசுவது போன்றோ, அவருடைய துணை போன்றோ வராது இல்லையா? அந்த கவலைகள் இப்போது இல்லை.இத்தனை வயதில் இந்த அளவுக்கு பிரபலமாவோம் என்று நினைத்து பார்த்தது கூட கிடையாது. எல்லாமே கனவு போல் இருக்கிறது.இந்த வயதிலும், எங்களுக்கு திறமை இருக்கிறது என, உலகிற்கு நிரூபித்து விட்டோம். எங்களை பார்த்து, மற்ற பாட்டிகளும் வர ஆரம்பித்து விட்டனர். எங்களின் ரீல்ஸ்கள், 1.50 கோடி பார்வைகளை எட்டியுள்ளன. எங்கள் நடனங்களுக்கு பிரபலங்களும், 'லைக்' போடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி