உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாங்கி செல்வர்!

வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாங்கி செல்வர்!

இயற்கை முறையில் தேயிலை, காபி, பழ மரங்கள், சிறுதானியங்கள், மூலிகைகள் உள்ளிட்ட பல விதமான பயிர்களை சாகுபடி செய்துவரும், நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கென்னடி கிருஷ்ணன்:இதுதான் என் பூர்வீக கிராமம்; விவசாயம் தான் எங்கள் குடும்ப வாழ்வாதாரம். நான், குன்னுாரில் செயல்படும் வெலிங்டன் மருத்துவமனையில் மருந்தாளுனராக, 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றபின், முழுநேரமாக விவசாயத்தில் இறங்கி விட்டேன்.எங்கள் தோட்டத்தின் மொத்த பரப்பு, 15 ஏக்கர். இதில், 3 ஏக்கரில் காபி; 6 ஏக்கரில் தேயிலை செடிகளும், மீதமுள்ளவற்றில் காய்கறிகள், சிறுதானியங்கள், 'தைம், ரோஸ்மேரி, லெமன் கிராஸ்' உள்ளிட்ட மூலிகைகளையும் பயிர் செய்து வருகிறேன்.இந்த தோட்டம், செங்குத்தான மலைப் பகுதியில் அமைந்திருப்பதால், மேடு, பள்ளம் அதிகம்; இதில், தடுமாறாமல் நடப்பதே கஷ்டம். இத்தகைய சவால் நிறைந்த நிலத்தில், பலவித பயிர்களை விளைவித்து, தோட்டத்தை பசுமையாக மாற்றி இருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர். தோட்டத்தின் பல இடங்களில் சுனைகள் இருப்பதால், அதிலிருந்து ஓரளவுக்கு தண்ணீர் கிடைக்கிறது; தவிர, மழைநீரை சேகரித்தும் விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.அராபிகா வகையைச் சேர்ந்த, 6,000 காபி செடிகளை நடவு செய்து நான்கு ஆண்டுகளாகின்றன. இவற்றில் கிடைக்கும் காபி கொட்டைகளை வறுத்து அரைத்து, காபி துாள் தயாரித்து, 100 கிராம், 80 ரூபாய் என விற்பனை செய்கிறேன். மேலும், 6 ஏக்கரில், 12,000 தேயிலை செடிகள் உள்ளன; அவற்றை, 15 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை பறிக்கிறோம். அனைத்து பசுந்தேயிலைகளையும், அரசின் கூட்டுறவு தொழிற்சாலைக்கு விற்பனை செய்கிறோம். அங்கு, கிலோவிற்கு 12 ரூபாய் வீதம் விலை கிடைக்கிறது.தைம், ரோஸ்மேரி, லெமன் கிராஸ் உள்ளிட்ட மூலிகை செடிகளின் இலைகளை பயன்படுத்தி டீ, உணவு நறுமணமூட்டி, தைலம் தயாரிக்க பயன்படுத்தலாம்.என் தோட்டத்தில் விளையும் பொருட்கள் குறித்த தகவல்களையும், அதன் விலை நிலவரங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவேன். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்வர்.காய்கறிகள், சிறுதானியங்கள், தேயிலை ஆகியவற்றின் விற்பனை வாயிலாக, கணிசமான வருமானம் கிடைக்கிறது. பழவகை மரங்கள், மூலிகைகள் உள்ளிட்ட மற்ற பயிர்களில் இருந்து, இனிதான் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், லாபம் பலமடங்கு அதிகரிக்கும்.தொடர்புக்கு: 94436 03707.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !