தன்னம்பிக்கையை மட்டும் விட்டுடாதீங்க!
திருச்சியில், 'லிம்ராஸ் சலுான்' என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி, மாதம், 6 லட்சம் ரூபாய் ஈட்டும் பர்ஜானா: நான் பிளஸ் 1 படித்தபோதே, காதல் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் , திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை. அழகு கலை நிபுணர் பயிற்சி படித்தேன். அப்பாகிட்ட போய், 'எனக்கு ஒரு அழகு நிலையம் வைத்து கொடுங்க' என்று கேட்டேன். அப்பாவும், சின்ன தாக ஒரு கடை எடுத்து தர, என்னோட அழகு நிலையத்துக்கு, 'லிம்ராஸ்' என்ற பெயர் வைத்து துவங்கினேன். ஒரு நாள் எனக்கும், என் கணவருக்கும் நடந்த பிரச்னையில் என்னை அரிவாளால் அவர் வெட்டியதில், நான் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிஞ்சுட்டேன். எனக்கு எட்டு மணி நேரம் ஆப்பரேஷன் பண்ற அளவுக்கு முகத்தில் அத்தனை வெட்டுகள். கண் விழித்து பார்த்தபோது, கண்ணாடியில் என் முகத்தை பார்த்து அவ்ளோ அழுதேன். 'கண்ணு, மூக்கு போயிருந்தா என்ன பண்ணியிருப்பே... கன்னம் தானே...' என்று, டாக்டர் ஆறுதல் படுத்தினார். விவாகரத்து வாங்கிட்டு, எனக்கு என் மூன்று குழந்தைகள் தான் உலகம் என்று வாழ ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில், பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டேன். என் குழந்தைகளுக்காக வெறித்தனமாக உழைத்தேன். இந்த துறையில் புதிதாக வரும் விஷயங்களை கற்றுக்கொண்டு என்னை, 'அப்டேட்' செய்து கொண்டே இருப்பேன். கடந்த, 26 ஆண்டு களாக இந்த தொழிலில் இருக்கிறேன். 40,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். தற்போது, என்னிடம், 35க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். மாதம், 6 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கிறேன். விவாகரத்து ஆன பெண்கள், அப்பா, அம்மா இல்லாத பெண் பிள்ளைகள், திருநங்கையருக்கு அழகு கலை குறித்து இலவச வகுப்புகள் எடுக்கிறேன். திருச்சியில் இருக்கும் பல பெண்கள் கல்லுாரிகளுக்கும் சிறப்பு அழைப்பாள ராக போய் பேசி உள்ளேன். 'என்ன நடந்தாலும் சரி, தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்' என்பது தான், நான் எப்போதும் சொல்லும் தாரக மந்திரம்.