கூடுகை நிகழ்வை என் வீட்டில் நடத்தி வருகிறேன்!
செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு: நான் பிறந்து வளர்ந்தது புதுச்சேரியில். தாய்மொழி மலையாளம்; படித்தது ஆங்கில வழி கல்வி. ஆனால், 10ம் வகுப்பு வரை தமிழ் தான் என் இரண்டாவது மொழிப் பாடம். என் தமிழாசிரியர்கள் ஏற்படுத்திய ஆர்வத்தால், தமிழ் உச்சரிப்பு செறிவுடன் எனக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்தது.என் 16வது வயதில், புதுச்சேரி அகில இந்திய வானொலியில் நடந்த டிராமா ஆடிஷனில் தேர்வாகி, நாடகக் குரல் கலைஞரானேன். அதன்பின், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரியில், 'மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க்' படிப்பில் சேர்ந்தேன். அங்கு படித்துக் கொண்டிருந்தபோதே, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் எனக்கு வேலை கிடைத்தது.பொதுத்துறை பணி என்பதால், முதுநிலை படிப்பை விட்டுட்டு வேலையில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த மூன்றே மாதங்களில், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.தமிழில் அற்புதமான சிறுகதைகளை இளைஞர்களுக்கு வாசித்து காட்ட, முத்தான 380 சிறுகதைகளை, 'கிளப் ஹவுஸ்' என்ற ஆடியோ செயலி வழியாக, நாள்தோறும் இரவில் ஒவ்வொரு கதையாக வாசித்தேன்; அதற்காக பலரும் இணைப்பில் காத்திருப்பர்.தங்கள் கதைகள், என் குரலில் வேறொரு பரிமாணத்தை அடைந்ததாக மிக பிரபலமானவர்கள் சிலாகித்து கூறினர்.இவை அனைத்தையுமே, என் தமிழ் சார்ந்த பணிக்கான பெரும் அங்கீகாரமாக பார்க்கிறேன். இப்படி, என் குரல் எல்லா தொழில்நுட்ப தளங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.செய்திகள் வாசிப்பது, இந்தியன் ஆயில் பணி, மேடை நாடகங்கள், சீரியல், சினிமா என அடுத்தடுத்து பல தளங்களுக்கு நான் பயணப்பட, என் கணவரின் ஆதரவும் ஒரு காரணம்.என் பிள்ளைகள் வளர்ந்து, அவரவர் பாதையில் சிறகடித்து பறந்த பின், வீடெனப்படுவது வெற்றுக்கூடாக போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால், 'கூடுகை' என்ற நிகழ்வை கடந்த எட்டு மாதங்களாக என் வீட்டில் நடத்தி வருகிறேன். பொதுமக்கள் பங்கேற்கும் இந்நிகழ்வுக்கு, 'சித்திரை கூடல், ஆடித்திரள், புரட்டாசி பூங்கா, ஐப்பசி வைபவம்' என, தமிழ் மாத பெயர்களை சூட்டி வருகிறேன்.மனம் விட்டு பேசுதல், கற்றல் அனுபவங்களை பகிர்தல் போன்றவற்றோடு, விதவிதமான வேடிக்கை விளையாட்டுகளும் இதில் இடம்பெறும். தொடர்ந்து தமிழுடன் கைகோர்த்து நடப்பேன்!