உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / மாஸ்டர் வரலைன்னா நானே பிரியாணி தயாரித்து விடுவேன்!

மாஸ்டர் வரலைன்னா நானே பிரியாணி தயாரித்து விடுவேன்!

பிரியாணி உலகின், சக்கரவர்த்தி போல திகழும், துபாயில் வசிக்கும், தமிழகத்தை சேர்ந்த ஜப்பார் பாய்: நான், பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை, திருவல்லிக்கேணியில் தான். வீட்டில் எப்போதும் வறுமை தான். 15 வயதிலேயே, 'பைக் சீட், டேங்க் கவர்' தைக்கும் கடையை, தனியாக துவக்கினேன். அப்போதே என்னிடம், 10 பேர் வேலை பார்த்தனர்.ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் போக மாதம், 30,000 ரூபாய் லாபம் வந்தது. தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி, அந்தமான் தீவுக்கும், 'சீட் கவர்' அனுப்பி, நல்ல லாபம் பார்த்து வந்தேன். அப்போது, நாங்கள் தயாரிக்கும் பொருட்கள் எல்லாம், டில்லியிலிருந்து குறைந்த விலைக்கு, பிற கடைகளுக்கு வர ஆரம்பித்தன. இதனால், நஷ்டம் ஏற்பட்டு, கடையை மூடும் சூழல் உருவானது.அப்போது தான் ஒரு யோசனை தோன்றியது. என் தாத்தா, பிரியாணி மாஸ்டர். தாத்தாவின் தொழிலை செய்ய முடிவு செய்து, மாஸ்டர் ஒருவரிடம் சேர்ந்து, பிரியாணி செய்ய கற்று, அப்பா பெயரில், 'பஷீர் கேட்டரிங் சர்வீஸ்' ஆரம்பித்தேன். திருமணம், பிறந்த நாள் போன்ற விழாக்களுக்கு, பிரியாணி செய்து கொடுத்தேன்.கடந்த, 2020ல், 'கொரோனா' சூழலில், நாம் பிரியாணி செய்வதை, நான்கு பேர் பார்த்தால், 'ஆர்டர்' அதிகமாகும்; நம்மை பார்த்து நான்கு பேர், பிரியாணி செய்ய கற்று கொள்ளட்டும் என, 'புட் ஏரியா தமிழ்' என்ற பெயரில், 'யு - டியூப்' சேனலை ஆரம்பித்தேன். தற்போது, 20 லட்சம் பேர், என் வீடியோக்களை பார்க்கின்றனர்.என் வீடியோவில், பிரியாணிக்கு என்னென்ன பொருட்கள் சேர்க்கணும்; எவ்வளவு நேரம் வேக விடணும் என, சரியான அளவை கூறுவேன். அது தான், மக்கள் என்னை முழுமையாக நம்ப ஆரம்பித்ததுக்கு காரணம்.முதலில், அரபு நாடான துபாயில், 'ஜப்பார் பாய் பிரியாணி உணவகம்' என்ற பெயரில் கடை ஆரம்பித்தேன். வாடிக்கையாளர் கூட்டம் அதிகம் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், அடுத்தடுத்து, மூன்று கிளைகளை திறந்தேன். கோழி, ஆடு, மான், ஒட்டகம் என, 12 வகை பிரியாணிகளை செய்து கொடுக்கிறேன்.கோழி பிரியாணி, 230 ரூபாய்; மற்ற படி, 150 ரூபாய்க்கு கூட, என் கடையில் வந்து சாப்பிட்டு போகலாம். காசில்லாமல், யாராவது வந்தால், காசு வாங்காமலும் கொடுக்கிறோம். இவ்வளவு விலை குறைவாக விற்பதற்கு காரணம், தமிழர்கள் தான்.துபாயில் தமிழர்கள் பலரும் துாய்மை பணியாளர்களாக, சாலை வேலை, கட்டட வேலை என, பொருளாதார ரீதியில் சிரமப்படுகின்றனர். அவர்கள் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்பது தான், என் நோக்கம்.பிரியாணி தயாரிப்பவர் திடீரென விடுமுறை எடுத்தால், நானே பிரியாணி செய்து விடுவேன். அதனால் தான், இந்த வெற்றி சாத்தியமானது. துபாயில் ஆரம்பத்தில் வாடகை வீட்டில் தான், குடும்பத்துடன் இருந்தோம். இப்போது, 13 கோடி ரூபாயில் சொந்தமாக வீடும், ஒரு கோடி ரூபாயில் காரும் வாங்கி விட்டேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை