தையல் தொழிலில் அசத்தும், திருநெல்வேலி, டவுன் பகுதியை சேர்ந்த முத்து லட்சுமி: நான், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டு வேலை செய்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன். அப்பா, தையல் கற்றுக்கொள்ள சொன்னார்; தையல் இயந்திரமும் வாங்கிக் கொடுத்தார். விருப்பமின்றி தான், தையல் பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தேன். எல்லாரும், நான் தைக்கும் ஆடைகள், புது வடிவமைப்புடன் சிறப்பாக இருப்பதாக கூறினர். அந்த வார்த்தைகளை கேட்டபின் தான் அதில் ஈர்ப்பு வந்தது; ஆர்வத்துடன் புதுப்புது வடிவமைப்புகளை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதன்பின் எனக்கு திருமணமானது. கணவர், நகைக்கடை வைத்திருக்கிறார். ஆனாலும், எனக்கான செலவுகளுக்கு நானே சம்பாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எங்களுக்கு இரண்டு மகள்கள். நான் படிக்காததால், அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் என, நினைத்தேன். அவர்களின் படிப்புக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, சமூக வலைதளங்களில் வீடியோக்களை பார்த்து, தையலில் புதுப்புது வேலைப்பாடுகளை கற்றுக் கொண்டதுடன், தொடர் பயிற்சி வாயிலாகவும் என்னை மெருகேற்றிக் கொண்டேன். ஆடைகளில், சிறப்பு கொக்கிகள் வாயிலாக செய்யப்படும் அலங்கார வேலைப்பாடு மற்றும் பூ வேலைப்பாடுகளை கற்று, அதற்கான பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்கள் அதிகமானதால், 7 ஆண்டுகளுக்கு முன், வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு கடை ஆரம்பித்தேன். 11 தையல் இயந்திரங்கள் வாங்கி, வியாபாரத்தை விரிவுபடுத்தினேன். காலை, 9:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை கடுமையாக உழைக்கிறேன். புத்தகத்தை படிக்க முடியாத நான், வாழ்க்கையையும், மனிதர்களையும் படித்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் படிக்க அடம் பிடித்திருக்க வேண்டும்; அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டேன். ஆனால், அதை உணர்ந்து எனக்கான வாய்ப்பை நானே உருவாக்கி, உழைப்பால் மேலே வந்துள்ளேன். மூத்த மகள், எம்.பி.ஏ.,வும், இளைய மகள், பி.காம்., முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர். 'இரண்டு பட்டதாரிகளின் அம்மா நான்' என, கூடிய விரைவில் பெருமையாக சொல்வேன். தையல் தொழில் வாயிலாக நல்ல வருமானம் ஈட்டி வருகிறேன். வாழ்க்கையில் முன்னேற படிப்பு, 50 சதவீதமும், உழைப்பு, 50 சதவீதமும் கை கொடுக்கும். படிக்கவில்லை என்றால், 100 சதவீதம் உழைக்க வேண்டும். அதான், நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறேன்.