உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பப்பாளி பயிரிட்டால் 16 - -18 மாதங்களில் மகசூல் கிடைக்கும்!

பப்பாளி பயிரிட்டால் 16 - -18 மாதங்களில் மகசூல் கிடைக்கும்!

இயற்கை வேளாண்மையில், 'ரெட் லேடி' ரக பப்பாளி சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வரும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத்:நான், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். விவசாய குடும்பத்தில் பிறந்ததால், சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் அதிகம். பள்ளி, கல்லுாரி காலங்களில் ஓய்வு நேரம் கிடைக்கும்போது, தோட்டத்துக்கு வந்து விவசாய வேலைகள் செய்வேன். படிப்பு முடித்த பின், தனியார் கம்பெனியில், 20 ஆண்டுகள் வேலை பார்த்தேன்.இயற்கை விவசாயம் பற்றிய தேடல் எனக்குள் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டேன். இங்கு, 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். முதல் கட்டமாக, 2 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடியும், அதில் ஊடுபயிராக ரெட் லேடி ரக பப்பாளியை பயிரிட்டேன். பப்பாளியில் நல்ல வருமானம் கிடைத்ததால், 2 ஏக்கரில் தனி பயிராக சாகுபடி செய்திருக்கிறேன். நான்கு மாதங்களாக தொடர்ந்து மகசூல் எடுத்து வருகிறேன். இயற்கை விவசாயத்தில் என் மனைவிக்கும் அதிக ஆர்வம். அவங்க ஒத்துழைப்பில் தான் இதை வெற்றிகரமாக செய்ய முடிகிறது.பப்பாளியில பல ரகங்கள் இருக்கு; ஆனால், ரெட் லேடி பழங்களுக்கு தான் இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த பழத்தை அறுத்தால், சதை பகுதி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். மற்ற பப்பாளி பழங்களைவிட, இதில் சுவையும் அதிகம்.எங்கள் பகுதியில், பப்பாளி சாகுபடி அதிகம் கிடையாது; அதனால், எங்கள் தோட்டத்து பப்பாளி பழங்களை சந்தைப்படுத்துவதில், எந்த சிரமமும் இல்லை. விருதுநகர் மற்றும் சிவகாசி சந்தைகளில் விற்பனை செய்கிறோம். வியாபாரிகள் நேரடியாக வந்தும் வாங்கிச் செல்கின்றனர். பப்பாளியில், 1 கிலோவுக்கு, சராசரியாக, 20 ரூபாய் லாபம் கிடைக்கிறது. கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 10,500 கிலோ பழங்கள் விற்பனை வாயிலாக, 2.10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. பராமரிப்பு, பறிப்பு கூலி, போக்குவரத்துச் செலவுகள் போக, 1.56 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது.இந்த பப்பாளி சாகுபடி வாயிலாக, ஏக்கருக்கு சராசரியாக, 78,000 ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து மகசூல் அதிகரிப்பதால், இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.கொரோனா பரவலுக்கு பின், மக்கள் மத்தியில் பப்பாளி பயன்கள் குறித்த விழிப்புணர்வு உள்ளது. குறைவான பராமரிப்பில் கணிசமான வருமானம் கிடைக்கும். ஒரு முறை பயிர் செய்தோம் எனில், 16 முதல் -18 மாதங்களில் மகசூல் கிடைக்கும்.தொடர்புக்கு: 99106 66376.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ