உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  கேக் தயாரிப்புக்கு செலவு ரொம்ப கம்மி!

 கேக் தயாரிப்புக்கு செலவு ரொம்ப கம்மி!

'பிளேவர்ட் பை திவ்யா' என்ற பெயரில், 11 ஆண்டுகளாக, வீட்டிலிருந்தபடியே, 'கேக்' வியாபாரம் செய்து வரும், துாத்துக்குடியை சேர்ந்த திவ்யா: கேக் செய்யும் தொழில் துவங்குவதற்கு, 20 முதல், 30 லிட்டர் கொள்ளளவு உள்ள அடுப்பு வாங்க வேண்டியது முக்கியம். 5,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய்க்குள் இதை வாங்கி விட முடியும். அதன் பின், பாத்திரங்கள், மைதா, சர்க்கரை, முட்டை, வெண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வாங்க வேண்டும். 15,000 ரூபாய் இருந்தால், வீட்டிலிருந்தபடியே கேக் செய்யும் வியாபாரத்தை ஆரம்பித்து விடலாம். ஆரம்பத்தில் உங்கள் நெருங்கிய வட்டம், அக்கம்பக்கத்தினருக்கு கேக் செய்து கொடுக்க வேண்டும். அவரவர் செய்யும் கேக் தயாரிப்புகளை புகைப்படம், வீடியோ எடுத்து, அவை விற்பனைக்கு உள்ளன என்பதையும் குறிப்பிட்டு இணையத்தில் பதிவிடலாம். வாடிக்கையாளர்களின் கருத்தையும் பெற்று, அவற்றையும் வெளியிடலாம். தொடர்ந்து பதிவிடும் போது தான், அது பலருக்கு சென்றடைந்து, 'ஆர்டர்'கள் கிடைக்க துவங்கும். உதாரணமாக, 1 கிலோ கேக் செய்வற்கான மூலப்பொருட்கள் வாங்குவதற்கு, 200 ரூபாய் செலவாகிறது எனில், அதிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து, விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் உடல் உழைப்பு, மின்சார பயன்பாடு, போக்குவரத்து போன்ற செலவுகளையும் ஈடு கட்டி கணிசமான லாபத்தை பெற முடியும். தரமில்லாத, விலை மலிவான பொருட்களை பயன்படுத்தவே கூடாது. சிகப்பு நிற கேக்குகளை சிலர் ஆர்டர் செய்வர். அத்தகைய ஆர்டர்கள் வரும் போது, அதிக நிறம் சேர்ப்பது உடல் நலத்துக்கு உகந்ததல்ல என்பதை வெளிப்படையாக தெரிவித்து விட வேண்டும். இதுபோன்ற விஷயங்கள், வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். வீட்டிலிருந்தபடியே கேக் வியாபாரம் துவங்கும் போது, 100 ரூபாய் செலுத்தி, தர சான்றிதழ் உரிமம் பெற வேண்டும். அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்தும் போது, சரக்கு மற்றும் சேவை வரிக்கு பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலான கேக்குகள், எடுத்து செல்லும் போதே சேதமடைந்து விடும். எனவே, எளிதில் சேதமடைய வாய்ப்புள்ள கேக்குகளை, நாமே பாதுகாப்பாக எடுத்துச் சென்று, கொடுக்க வேண்டும். ஆர்டர் எடுக்கும் போதே, 50 சதவீத முன்பணம் வாங்கி கொள்வது நல்லது. விலை குறித்து பேரம் பேசினால், உங்களுடைய உழைப்பு, பொருளின் தரம் போன்றவை குறித்து எடுத்து சொல்லி, புரிய வைக்கலாம். நேர மேலாண்மை மிகவும் முக்கியம். குறித்த நேரத்தில் தயாரித்து கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் பழகி, இதில் நீடித்து விட்டால், வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை