'மிமிக்ரி' எனும் மற்றவர்கள் குரலில் பேசும் திறமையுடன், அழகிய குரலில் பாடும் திறனும் கொண்ட, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த தனேஷ் மணி: சிறு வயதில் இருந்தே பாட்டு பாடுவதும், 'மிமிக்ரி' செய்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். குருநாதர் இல்லாமல், நானே கற்றுக் கொண்டேன். 17 வயதில், மேடை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் கிடைத்தன. கல்லுாரி படிப்புக்காக சென்னை வந்தேன். சென்னை மாநிலக் கல்லுாரியில், இளங்கலை தமிழ் படித்தேன். வெவ்வேறு தொலைக்காட்சி சேனல்களில், நிகழ்ச்சிகள் செய்தேன். ஏற்கனவே என் காலில் சிறு பிரச்னை இருந்த நிலையில், ஒரு விபத்துக்கு பின், நடக்க முடியாமல் போனது. இதனால், ஆறு மாதங்கள் படுக்கையில் தான் இருந்தேன். பொருளாதார சிக்கல் வந்தது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும், என் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அதனால், என்னை நானே சமாதானப்படுத்தி, மனதளவில் மீண்டு வர ஆரம்பித்தேன். காலில் தானே பிரச்னை... குரல் நன்றாகத் தானே இருக்கிறது என, சக்கர நாற்காலியில் சென்று இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்தேன். திறமைக்கு முன், என் குறை மக்களுக்கு தெரியவில்லை. திருமண முகூர்த்த சமயங்களில் மாதத்துக்கு, 20 நிகழ்ச்சிகள் வரை கிடைக்கும். மற்ற மாதங்களில், 10 நிகழ்ச்சிகள் வரை இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்கு, 8,000 ரூபாய் வாங்குகிறேன். செலவுகள் போக, 6,000 ரூபாய் இருக்கும். மாதம், 60,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். திருநெல்வேலி, துாத்துக்குடி, பாபநாசம், தென்காசி, கடையநல்லுார், நாகர்கோவில் போன்ற இடங்களில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. கால்கள் செயலிழந்து நடக்கும் திறனை இழந்த போது, என் உலகமே வெறுமையாகி உடைந்து போனது. அப்போது, என்னை மீட்டெடுக்க என்னால் மட்டுமே முடியும் என உணர்ந்தேன். அந்த நாள் முதல், நம்பிக்கை மட்டுமே என் வாழ்க்கையை துவங்க போதுமானதாக இருந்தது. கடந்த, 14 ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் தான் என் வாழ்க்கை நகர்கிறது. நிகழ்ச்சிகளில் என்னை பார்ப்போர், 'நீங்கள் தான் எங்களுக்கு முன்னுதாரணம்' என்று சொல்லும் போது, என் குறைகளை மறந்து பெருமைப் படுகிறேன். என்னை பொறுத்தவரை, குறை என் உடம்பில் தான் உள்ளது; மனதில் இல்லை. என்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால், சந்தோஷமாக வாழ முடியும். இப்போது என் அடையாளம் மாற்றுத்திறனாளி மணி இல்லை; 'மிமிக்' மணி! தொடர்புக்கு: 99405 60118.