உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / என் தலைமுறைக்கு மரியாதையை தந்த பாம்பு பிடி தொழில்!

என் தலைமுறைக்கு மரியாதையை தந்த பாம்பு பிடி தொழில்!

மக்கள் நடமாடும் இடங்களில் திரியும் பாம்புகளை பிடித்து, வடநெம்மேலியில் இருக்கும் அரசு பாம்பு பண்ணையில் ஒப்படைக்கும் வேலையை செய்து வரும், செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த, 57 வயதாகும் மாசி: கடந்த 40 ஆண்டுகளாக பாம்பு பிடிப்பது தான் என் வாழ்வாதாரம். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாம்பு பிடியாளர்களில் நானும் ஒருவன். என் பெற்றோருமே பாம்பு பிடிக்கும் தொழில் தான் செய்து வந்தனர். 14 வயதில் இந்த வேலையை ஆரம்பித்தேன். ஒரு இடத்தின் தன்மையை வைத்தே பாம்பு எங்கு இருக்கும் என்று கண்டுபிடித்து விடுவேன். தடத்தைப் பார்த்தாலே சிறு பாம்பா, பெரிய பாம்பா என்று தெரிந்து விடும். நாம் அமைதியாக இருந்தாலே, 10 நிமிடங்களில் பாம்பு தானாக வெளியே வந்து விடும். பாம்பு பிடிக்கும் போது முதலில் அதன் அசைவை கவனிக்கணும். அது எந்த பக்கம் திரும்புது, எப்போது தலையை துாக்குதுன்னு பார்த்து, அதன் செயல்பாட்டை கணிச்சு நாமும் அசையணும். பதற்றமானால் ஆபத்து. பாம்பையும் காயப்படுத்தி விடக்கூடாது. அதை பிடித்து, சாக்குக்குள் போட்டு, சாப்பிட ஒரு எலியையும் பிடிச்சு போட்டு கட்டி வைத்து விடுவேன். மறுநாள் காலையில் பாம்பை பண்ணையில் கொடுத்து, பணம் வாங்கி வருவேன். என் 25 வயது வரை, பாம்பு பிடித்துக் கொடுத்தால் பணம் கொடுப்பர் என்று மட்டும் தான் தெரியும். ஒரு நாள் பாம்பு பண்ணையில் இருந்த ஒருவரிடம், 'நாங்கள் பிடித்து தரும் பாம்பை என்ன பண்ணுவீங்க?'ன்னு கேட்டதற்கு, 'இந்த பாம்புகள்ல இருந்து விஷம் எடுக்குறோம்; அதை மருந்தாக மாற்றி, பாம்பு கடித்தவங்களுக்கு பயன்படுத்துகிறோம்' என்றார். நாம் பணத்திற்காக பிடிக்கும் பாம்பு, யாரோ ஒருவரின் உயிரை காப்பாற்ற பயன்படுகிறது என்று தெரிந்ததும், என் தொழில் மீது இருந்த மரியாதை இன்னும் அதிகமானது. பிடிச்சிட்டு போற பாம்பின் ரகத்துக்கு ஏற்ற மாதிரி 1,500ல் இருந்து 4,000 ரூபாய் வரைக்கும் தருவர். வெளிநாட்டுல இருந்து வந்த ஒருத்தர், எங்கள் திறமையை பார்த்துட்டு தாய்லாந்துக்கும், அமெரிக்காவிற்கும் அழைத்து சென்றார். அங்கு, நாங்கள் பைத்தான் ரகம் உட்பட 50 பாம்புகளை பிடித்துக் கொடுத்தோம். அது, நம் நாட்டு நாளிதழ்களில் வெளியானது. அதன்பின், எங்களுக்கு ஊரில் கிடைத்த மரியாதையே வேறு. மத்திய அரசு, 2023-ம் ஆண்டு எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்த தொழிலை ஒருநாளும் வெறுத்ததில்லை. விருது கொடுத்ததால் தான், இந்தியா முழுக்க நான் யார் என்று தெரிந்தது. இந்த தொழில், என் தலைமுறைக்கு மரியாதையை தேடிக் கொடுத்திருக்கிறது. இதை, என் காலம் முழுக்க செய்வேன். * இவரது மொபைல் எண் கிடைக்கவில்லை பாஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ