உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / இப்போது கவுரவமாக வாழ்கிறேன்!

இப்போது கவுரவமாக வாழ்கிறேன்!

திருப்பூர், பெருமாநல்லுாருக்கு அருகிலுள்ள, தோட்டத்துப்பாளையம் என்ற சிற்றுாரில், திருநங்கைகளின் கைமணத்தில் சிறுதானிய இனிப்புகள் தயாராகின்றன. இந்தக் குழுவின் தலைவியான திருநங்கை திவ்யா:சொந்த ஊர் ராமேஸ்வரம்; எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். அப்போது உடலளவிலும், மனதளவிலும் ஏற்பட்ட மாறுதலால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். என்னால் என் குடும்பத்தார் அவமானப்படக் கூடாது என்று எண்ணியே வெளியேறினேன்.ஆரம்ப காலத்தில் யாசகம் பெற்று பிழைக்க வேண்டிய அவல நிலை தான் எனக்கிருந்தது. ஒரு கட்டத்தில், திருப்பூருக்கு வந்து சேர்ந்தேன்.அங்கு இருந்த திருநங்கையர் சிலரிடம் என் நிலையை எடுத்துக் கூறினேன்; அவர்கள் தான் அடைக்கலம் கொடுத்தனர்.வீடுகளில் குழுவாகச் சென்று, 'டோலக்'கைத் தட்டி, ஆடிப் பாடி ஆசீர்வாதம் செய்வது, திருஷ்டி சுற்றிப் போடுவதன் வாயிலாக கிடைக்கும் தொகையை வைத்தும், யாசகம் பெற்றும் வாழ்க்கையை ஓட்டி வந்தேன்.ஆனால், 'இது நமக்கான விதி அல்ல... நாமும் கவுரவமான தொழில் எதையாவது செய்து கண்ணியமாக வாழ வேண்டும்' என விரும்பினேன். ஆனால், 'திருநங்கை' என்ற ஒரே காரணத்துக்காக வேலைகொடுக்க எவரும் முன்வரவில்லை.நாங்கள், 20 பேர் கொண்ட ஒரு குழுவாகச் சேர்ந்து, சிறுதானியங்களில் தின்பண்டங்கள் செய்ய துவங்கினோம். ஆனால், அவற்றை விற்பனை செய்வதற்கு கடைக்காரர்கள் முன்வரவில்லை.வீட்டிலேயே தயாரித்து, தெருத் தெருவாகச் சென்று விற்க முடிவு செய்தோம். ஆனால், எங்களுக்கு வீடு கிடைப்பதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மிகுந்த சிரமத்துக்கு இடையே வீடு கிடைத்தது. வீடு வீடாகச் சென்று விற்றோம்; அதில் ஓரளவு வருமானம் கிடைத்தது. அதன் பின், திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பல சந்தைகளுக்கும் சென்று, எங்கள் தயாரிப்புகளை விற்க துவங்கினோம்; அதிக வருமானம் கிடைத்தது.தின்பண்டங்களை தயாரிப்பது முதல், அவற்றை விற்பனை செய்வது வரை, அனைத்து வேலைகளையும் நாங்களே பிரித்து செய்தோம். தங்கமணி என்ற சமூக ஆர்வலர், சலுகை விலையில் மாதந்தோறும் எங்கள் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களை அனுப்பி வைக்கிறார்.இப்போது வருமானத்துக்கு யார் கையையும் எதிர்பார்க்காமல் வீட்டிலேயே தயாரித்து, சிறப்பாக வியாபாரம் செய்து, தலை நிமிர்ந்து வாழ்கிறோம். 'வந்தாள் மகராசி' என்ற பெயரில், 'யூடியுப்' சமூக வலைதளத்தில், 'சேனல்' ஒன்றையும் நடத்தி வருகிறோம். படித்த திருநங்கையருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்து விடுகின்றன.ஆனால், படிக்காத திருநங்கையரும் வாழ்வதற்கு அரசு உரிய வழிவகை செய்ய வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

shyamnats
ஜன 27, 2024 09:30

சிறந்த முயற்சி, கவுரவமாக தன் காலில் நிற்பதற்கான முயற்சியில் வெற்றியும் , மேலும் மேலும் வெற்றி பெறுவதற்குமாக வாழ்த்துக்கள்.


Kalyan Singapore
ஜன 25, 2024 04:47

வாழ்த்துக்கள் . முடிந்தால் ஓய்வு நேரங்களில் கல்வி கற்று முன்னேறுங்கள் . என் காலஞ்சென்ற மாமா ஒருவர் திருநங்கையாக பிறந்தாலும், பெற்றோர் ( எங்கள் தாத்தா பாட்டி ) ஊக்குவித்ததால் மிகுந்த கல்வி ( Phd in Food Technology from Mysore Food Research Institute) கற்று அமெரிக்கா சென்று அங்கேயேகுடியேறி தங்கி இருந்து காலமாகியும் விட்டார் . அவர் பெயரை கூறும்போதெல்லாம் 94 வயதான என் தாயாரின் கண்களில் கண்ணீர் நிரம்பி அழுவதைப்பார்த்தால் அவர் பட்ட வேதனைகளை என்னால் உணர முடிகிறது . அவர் தன சொந்த செலவில் 20-30 பெண்குழந்தைகளுக்கு படிக்க வசதி செய்திருந்தார் என்பதை அறியும் பொது அவரை மிகவும் நேசிக்கவும் மதிக்கவும் தோன்றுகிறது.


Sureshkumar
ஜன 23, 2024 09:46

வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்.


NicoleThomson
ஜன 22, 2024 20:41

வாழ்ந்து காட்டுங்கள் தோழிகளே , வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல , அதுவும் டாஸ்மாக் காலத்தில் மிக கடினம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை