மேலும் செய்திகள்
எங்கள் கடைக்கு 'கரன்ட் கனெக் ஷன்' கூட கிடையாது!
16-Mar-2025
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அருகே ஒடுகத்துார் பகுதியில் உள்ள, 'இந்திரா அம்மா கடை' உரிமையாளர் மகேஸ்வரி:எங்க கடை பேரு, இந்திரா அம்மா கடை. வெள்ளிக்கிழமைகளில் இந்த பகுதியில் வாரச் சந்தை நடக்கும். அதனால், எங்கள் கடைக்கு, சந்தை மேட்டுக் கடை என்று மக்களே பெயர் வைத்து விட்டனர். இந்த கடையை, 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். முதலில், காலை டிபன் மட்டும் தான் செய்தோம்.சிலர், பகல் 11:00 மணி வரைக்கும் சாப்பிட வருவர். அவர்கள் தான், 'நீங்க மதிய சாப்பாடும் போடலாமே...' என்று சொல்ல, சைவம், அசைவம் என மதிய சாப்பாடும் செய்ய ஆரம்பித்தோம். எங்கள் கடையில் அளவு சாப்பாடு எல்லாம் கிடையாது; வேணுங்கிற வரை சாப்பிடலாம்.நம்ம கடையில் களி - மட்டன் குழம்பு, சோறு - கருவாட்டுக் குழம்பை விரும்பி சாப்பிடுவர். சைவம் விரும்புவோர் களியும், கீரை குழம்பும் சேர்த்து சாப்பிடுவர். தவிர, சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, பரோட்டா எல்லாம் தயார் பண்றோம். தினமும் மதியம் 12:00 மணிக்கு எல்லாமே தயாராகி விடும்; 4:00 மணி வரை கடை பரபரப்பாக இருக்கும். கடையில் மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும் வேலை பார்க்கின்றனர்; அதிகம் கூட்டம் வரும்போது, என் தம்பி உதவிக்கு வருவார்.வாடிக்கையாளர்கள் தான் நமக்கு எல்லாமே. சிலர் இரண்டாவது முறை குழம்பு கேட்க தயங்குவர்; நாங்களே கேட்டு கேட்டு பரிமாறுவோம். அருகில் இருக்கிற பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்ப்போர், அங்கு வரும் மக்கள் என, அனைவருமே இங்கு வருவர். சுற்றி, 45 கி.மீ., தொலைவில் உள்ள ஊர்க்காரர்களுக்கும் நம்ம கடை மிகவும் பிடிக்கும். பக்கத்துல இருக்கும் வேப்பங்குப்பம் ஸ்டேஷன் போலீசார் எல்லாரும் நம்ம கடைக்கு ரெகுலர் கஸ்டமர்ஸ். ஒடுகத்துார் வனச்சரக அலுவலர்கள் பலரும், நம்ம கடையில் தான் பார்சல் வாங்கிட்டு போவாங்க.முன்பு ஒரு திருவிழாவுக்கு பெங்களூரில் இருந்து வந்திருந்த குடும்பம் ஒன்று, எங்கள் கடையில் சாப்பிட்டனர். அதன்பின், ஒவ்வொரு முறை அவர்கள் திருவிழாவிற்கு வரும்போதும், நம் கடையில் சாப்பிடாமல் போனதில்லை. அப்படி என்ன எங்கள் கடையில் சிறப்பு என்னவென்றால், அனைத்து மசாலாக்களையும் அம்மியில் அரைத்து தான் பயன்படுத்துகிறோம். வீட்டில் சமைப்பது போல் தான் இருக்கும். எனக்கு 45 வயது ஆகிறது; சொந்தமாக தொழில் செய்து சம்பாதிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
16-Mar-2025