உள்ளூர் செய்திகள்

சொல்கிறார்கள்

'வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு வகிக்கிறோம்!' 'ஆர்.வி.எம்., டெக்கரேட்டர்ஸ்' என்ற பெயரில் பூமாலை, ரூபாய் நோட்டு மாலை மற்றும் அலங்கார பொருட்கள் செய்து விற்பனை செய்து வரும், சேலத்தைச் சேர்ந்த 42 வயதாகும் சபரி: எங்கள் குடும்பம், மூன்று தலைமுறைகளாக இந்த தொழிலில் இருக்கிறது. சேலத்தில் ராஜ கணபதி கோவில் அருகே, என் தாத்தா ஒரு சிறிய பூமாலை கடையை துவங்கினார்; தாத்தாவுக்கு பின், அப்பா தொடர்ந்து நடத்தினார். நான் இந்த தொழிலுக்கு வந்த பிறகு உருவானது தான், 'ஆர்.வி.எம்., டெக்கரேட்டர்ஸ்' நிறுவனம். புதுமையான மாலைகள் பலவற்றை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தயாரித்து வருகிறோம். எங்கள் தனிச்சிறப்புகளில் ஒன்று, ரூபாய் நோட்டு மாலை. நான் ஆண்டுதோறும் வணிக ரீதியான சுற்றுலா சென்று, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அப்படி ஒருமுறை வட மாநிலங்களுக்கு சென்றபோது, கடவுளுக்கு ரூபாய் நோட்டு மாலையை காணிக்கையாக வழங்குவதை பார்த்தேன்; அதை, தமிழகத்திலும் அறிமுகப்படுத்தலாம் என்று தோன்றியது. இப்போது ரூபாய் நோட்டு மாலை மட்டுமல்லாமல், காசு மாலை, சாக்லேட் மாலை, முந்திரி மாலை, பாதாம் மாலை, கற்கண்டு மாலை, கிரீடம், சீர்வரிசை செட், இயற்கை மலர் பூங்கொத்து, சாக்லேட் பூங்கொத்து என, வாடிக்கையாளர்கள் விரும்பும் பல வகை பொருட்களையும் தயாரித்து வருகிறோம். மேலும், 100 - 20 ஆயிரம் ரூபாய் வரை, பல்வேறு விலைகளில் பூங்கொத்துகளை தயாரிக்கிறோம். எங்கள் கடையின் படியேறி வந்து ஒரு பொருளை கேட்கும்போது, 'எங்களிடம் இல்லை' என்று சொல்லக்கூடாது என்பது தான் முக்கிய நோக்கம். அதற்காகவே, எங்கள் வேலைகளையும் குழுக்களாக பிரித்திருக்கிறோம். மாலை கட்டுவதில் கைதேர்ந்தவர்கள் ஒரு குழு; பூங்கொத்துகள் தயாரிக்க ஒரு குழு; அலங்காரப் பணிகளுக்கு தனிக் குழு. எங்களிடம், 40க்கும் மேலானோர் பணியாற்றுகின்றனர்; கல்லுாரி மாணவர்கள் பலரும் பகுதி நேரமாக வேலை செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் எங்களுக்கு வேலை நேரம் என்று எதுவும் கிடையாது. சில நேரங்களில் துாக்கமே இல்லாமல், தொடர்ந்து வேலை செய்வோம். வாடிக்கையாளருக்கு சொன்னபடி சரியான நேரத்தில் வினியோகிப்பது தான் முக்கியம். வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியான தருணங்களில் நாங்களும் சிறிய பங்காக இருப்பது தான், எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் எங்களுடைய சேவைகளை வழங்கி வருகிறோம். தொடர்புக்கு: 98948 52082


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !