உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / விவசாயிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் விலை தருகிறோம்!

விவசாயிகளுக்கு 10 சதவீதம் கூடுதல் விலை தருகிறோம்!

விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று காய்கறிகள் மற்றும் மிளகு கொள்முதல் செய்து விற்பனை செய்யும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் செயல்படும், 'சிறுமலை உழவர் உற்பத்தியாளர்' நிறுவனத்தின் நிர்வாகியான, 65 வயதாகும் அழகேசன்: கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக, 1987ம் ஆண்டு தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, வேளாண்மை சார்ந்த சுய தொழில்கள் துவங்குவதற்கு, 'நபார்டு' வங்கி வாயிலாக கடனுதவிகள் வாங்கிக் கொடுத்தோம். அதைப் பயன்படுத்தி, ஏராளமான பெண்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் உள்ள பெண்களுக்கும் சுய தொழில் துவங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்ய வந்தோம். அப்போது தான் இங்கு சவ்சவ், பீன்ஸ், அவரை, மிளகு உள்ளிட்ட பயிர்கள் செழிப்பாக விளைந்தாலும், விற்பனை செய்ய விவசாயிகள் படாதபாடு படுவது தெரிந்தது. விளைபொருட்களை விற்பனை செய்ய, மலையில் இருந்து இறங்கி பல கி.மீ., துாரம் செல்ல வேண்டியிருந்தது. அவர்களின் சிரமங்களை தெரிந்து கொண்ட இடைத்தரகர்களும், வியாபாரிகளும் மிக மிக சொற்ப விலைக்கு வாங்கிச் சென்றனர். அதனால் உழைப்புக்கும், முதலீட்டுக்கும் ஏற்ற லாபம் கிடைக்காத நிலையில் இருந்தனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 350 விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'சிறுமலை உழவர் உற்பத்தியாளர்' நிறுவனத்தைத் துவக்கினோம். விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று மிளகு, காய்கறிகளை, எங்கள் நிறுவன ஊழியர்கள் கொள்முதல் செய்வர். சந்தை விலையை விட, 10 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து தான் கொள்முதல் செய்கிறோம். மிளகு சீசன் நேரத்தில் சந்தை விலை குறைவாக இருக்கும். அதனால், நாங்கள் கொள்முதல் செய்யும் மிளகை உடனடியாக விற்பனை செய்யாமல், இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்கிறோம். இதனால், விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை சற்று கூடுதலாகக் கொடுக்க முடிகிறது. சாகுபடி செலவுகளுக்குப் பணம் தேவைப்பட்டால், குறைந்த வட்டியில் கடனும் கொடுக்கிறோம். எங்கள் நிறுவனம் சார்பில் சிறுமலையிலும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டியிலும் இயற்கை அங்காடிகளை நடத்துகிறோம். சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், இயற்கை அங்காடிகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் பலசரக்கு கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறோம். கடந்தாண்டு, மிளகு, தேன், காபி கொட்டை, காய்கறிகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ததன் வாயிலாக, 95 லட்சத்து 74 ஆயிரத்து 700 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. தொடர்புக்கு 95669 62246


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை