சிறுதானியங்களில் தின்பண்டங்கள் செய்து தருகிறோம்!
இயற்கை முறையில் விளைந்த பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை, 'மண் வாசனை' என்ற அங்காடி வாயிலாக விற்பனை செய்து வரும் சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மேனகா:நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள், நம் உடம்புக்கு பயன் தரக்கூடியவையாக இருக்க வேண்டும். ஆனால், இன்று பலரும், 'பாஸ்ட் புட்' உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல், இது போன்ற உணவுகளை சாப்பிடுவதால், நோய்கள் பெருகிவிட்டன.நம் முன்னோர் பயன்படுத்திய உணவு கலாசாரத்தை மக்கள் மத்தியில் திரும்ப கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே, 'உணவுத் திருவிழா, கிராமிய சந்தைகள்' என, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன்.ஒரு மணி நேரத்தில், 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்களை வைத்து, 214 வகை உணவுகளை சமைத்து காட்டினேன். இது, 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' ஆகியவற்றில் இடம் பிடித்தது.கடந்த ஜூலை மாதம், ஒரு தனியார் பள்ளியில் கிராமிய திருவிழா நடத்தினோம். அதில், பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை வைத்து, 475 தோசை வெரைட்டிகள் செய்து, 'வேர்ல்டு யூனியன் ரெக்கார்டில்' இடம் பிடித்தேன்.அரிசி, கோதுமையில் என்னென்ன தின்பண்டங்கள் செய்ய இயலுமோ, அதையெல்லாம் சிறுதானியங்களிலும் செய்யலாம். இன்னும் சொல்லப் போனால், மக்களோட எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி, சுவையாகவும், தரமாகவும் செய்யலாம்.மாப்பிள்ளை சம்பா கோலா உருண்டை, கவுனி அரிசி குல்பி, ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்கிறோம். இதை சாப்பிட்டு விட்டு, 'இப்படியெல்லாம் கூட செய்ய முடியுமா?' என, பலரும் கேட்கின்றனர்.இன்றும் பெரும்பாலான மக்கள், இட்லி, தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே, பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்களில் தோசை மாவு தயாரித்தும் விற்பனை செய்து வருகிறேன்.ஒவ்வொரு தீபாவளிக்கும் இயற்கை விவசாயத்தில் விளைந்த சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசிகள் வாயிலாக, சுவை மாறாமல், ஸ்வீட், காரம் செய்து விற்கிறோம். ஆர்டர் அடிப்படையில் செய்து தருகிறோம்.இப்போதைக்கு துாயமல்லி, தேன்குழல், தினை பூந்தி லட்டு, சாமை காராசேவு, குதிரைவாலி ரிப்பன் சேவு, கருப்பு கவுனி லட்டு, இலுப்பைப்பூ சம்பா லட்டு தயாரிக்கிறோம். மக்களின் ஆதரவை பொறுத்து, இனிவரும் காலங்களில் பல வெரைட்டிகள் செய்யலாம் என இருக்கிறோம். வெறும் வியாபாரமாக இல்லாமல், நம் பாரம்பரியத்தை மீட்டுவர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செய்து வருகிறோம்.தொடர்புக்கு 98841 66772