குழந்தைகளுக்கான பேஷன் ஷோவுக்கு நல்ல வரவேற்பு!
தொழில் முனைவோர், மனோதத்துவ நிபுணர் என பல முகங்கள் கொண்ட சென்னையைச் சேர்ந்த சரிஹா சவுத்ரி:ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரியில் உளவியல் பட்டம் பெற்றுள்ளேன். 'ஈஸ்ட் வெஸ்ட் சென்டர் பார் கவுன்சிலிங்'கில் டிப்ளமா படித்துவிட்டு, 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைக்கோட்ராமா'வின் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றுள்ளேன். சென்னையில் பிரபல அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியாக, 2022ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறேன்.இந்த அகாடமி சார்பில், குழந்தைகளுக்கான சர்வதேச 'பேஷன் வீக்' நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். பேஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆர்வமும் இருக்கிறது.'வேர்ல்டு யுனிவர்சல் புரொடக் ஷன்' சார்பில், அமெரிக்காவில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று, 'மிஸ் வேர்ல்டு யுனிவர்ஸ்' என்ற பட்டத்தை வென்றுள்ளேன். இந்தியா மற்றும் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் போட்டியிட்டது நல்ல அனுபவம். இந்த அங்கீகாரம், அழகிற்கு மட்டுமல்ல; பன்முகத்தன்மை, தனித்தன்மை, சமூக சேவை உள்ளிட்டவற்றையும் கொண்டது. கூடுதலாக, 'ஸ்டார் ஐகான் ஆப் இந்தியா' விருதுகளின் ஏழாவது ஆண்டில், 'யுனிவர்சல் ஸ்டைல் திவா' விருது எனக்கு வழங்கப்பட்டது.கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் அழகு மற்றும் பேஷன் துறைகள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக, தமிழகத்தில் பேஷன் ஷோக்கள் மிகவும் குறைவு. சென்னையில் இதுபோன்ற பேஷன் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பது, எங்களுடைய நீண்ட நாளைய பெருங்கனவுகளில் ஒன்று.அதன் வாயிலாக, நிறைய குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பேஷன் துறைக்கு வரவழைக்கும் ஒரு சிறிய முயற்சியாகத்தான் இதை பார்க்கிறேன். அழகி போட்டிகளில் பங்கேற்பதற்கு இளம்பெண்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறோம்.சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கான பேஷன் ஷோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில், 150க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக சிலம்பாட்டம், பாட்டு, நடனம் உள்ளிட்டவையும் அந்த நிகழ்வில் இடம்பெற்றன. இவை போன்று வெவ்வேறு, 'கான்செப்ட்'களில் வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை இந்தியா முழுதும் நடத்த வேண்டும் என்ற ஐடியாவும் இருக்கிறது.