உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / 22 நாட்களில் ரூ.30,000 லாபம் கிடைக்கும்!

22 நாட்களில் ரூ.30,000 லாபம் கிடைக்கும்!

பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள, சேலம் மாவட்டம், காரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி: எங்கள் ஊரான காரிப்பட்டியிலும், சுற்றியுள்ள அயோத்தியாப்பட்டினம், வாழப்பாடி, முத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் பல விவசாயிகள், நிறைவான லாபம் பார்த்த விஷயம் தெரியவந்தது. சேலம் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தை அணுகி, முறையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பெற்று, 2018ல் இதில் இறங்கினேன். என் மகனும், மருமகளும் உறுதுணையாக இருக்கின்றனர். 1 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்ய, ஆரம்பகட்ட செலவுகளுக்கு, 10,500 ரூபாய் அரசு மானியமாக கிடைத்தது. அடுத்து, 1,144 சதுர அடியில் பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க, 1.20 லட்சம் ரூபாய் மானியம் கிடைத்தது. 52,500 ரூபாய் மதிப்புள்ள தளவாடப் பொருட்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள், 100 சதவீத மானியத்தில் கிடைத்தன.பட்டு வளர்ப்புத் தொழிலை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இப்படி ஏராளமான மானியத் திட்டங்களை செயல்படுத்துகின்றன.எங்களிடம், 1.5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில், 1 ஏக்கரில் ரசாயன உரங்கள் இன்றி, இயற்கை முறையில் மல்பெரி சாகுபடி செய்கிறோம். வி - 1 மல்பெரி ரகத்தை தான் பயிர் செய்கிறோம். எங்கள் நிலத்தில் போர்வெல் வசதி இருப்பதால், எப்போதும் தண்ணீர் இருக்கும்.இந்த மல்பெரி ரகத்தில், 40 நாட்களுக்கு ஒருமுறை தழைகள் அறுவடை செய்ய முடிகிறது. இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்து, 125 முட்டை தொகுதிகளை வாங்கி வைத்துள்ளோம். அதன் வாயிலாக, 115 கிலோ பட்டுக்கூடுகள் கிடைக்கும். எங்களுக்கு விற்பனை மையத்தில் கிலோவுக்கு குறைந்தபட்சம், 380 முதல் அதிகபட்சம், 700 ரூபாய் வரை விலை கிடைக்கும்.பெரும்பாலான சமயங்களில், கிலோவுக்கு, 450 ரூபாய் வீதம் விலை கிடைப்பது வழக்கம். 115 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனை வாயிலாக, 51,750 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் எல்லா செலவுகளும் போக, 30,000 ரூபாய் லாபம் கிடைக்கும். 22 நாட்களில் இந்தளவுக்கு லாபம் கிடைப்பது என்பது பெரிய விஷயம். அடுத்த ஒரு வாரத்தில் மனையை சுத்தப்படுத்தி, மறுபடியும் உற்பத்தியை துவங்குவோம்.ஓராண்டில், 11 முறை பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்வதன் வாயிலாக, மொத்தம், 3.30 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. தமிழக அரசின் பட்டு வளர்ச்சித் துறை, 2023ம் ஆண்டிற்கான சிறந்த பட்டுக்கூடு விவசாயி என்ற மாநில அளவிலான விருதை எனக்கு வழங்கி, பெருமைப்படுத்தியது.தொடர்புக்கு: 96296 09087.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !