உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்குது; ஓட்டுநர்கள் தடுமாற்றம்

தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்குது; ஓட்டுநர்கள் தடுமாற்றம்

மின்கம்பத்தை அகற்றுங்க!

பொள்ளாச்சி, ஜோதி நகர் பகுதியில் ரோட்டோரத்தில் மின்கம்பம் போடப்பட்டுள்ளது. அதன், அருகாமையில் குப்பை கொட்டப்படுவதுடன், அதிகளவு செடிகள் வளர்ந்து உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இதை கவனித்து, பயனற்ற மின்கம்பத்தை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.-- டேவிட், பொள்ளாச்சி.

மழை நீர் தேக்கம்

பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் இருந்து ஆச்சிபட்டி வரை, தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டில் மழை நீர் தேங்கும் இடத்தை சீரமைக்க வேண்டும். தற்போது தேங்கியுள்ள, மண் கழிவுகளை அகற்ற வேண்டும்.- கிஷோர், பொள்ளாச்சி.

மின் கம்பத்தை இடம்மாற்றணும்

பொள்ளாச்சி, வடுகபாளையம் அழகப்பா லே-அவுட் நான்காவது வீதியில் உள்ள, மின் கம்பம் மரத்தை ஒட்டி உள்ளது. இந்த மின்கம்பத்தின் மின்விளக்கு பகுதி மரத்தினுள் புதைந்துள்ளது. மின் கம்பத்தில் உள்ள மின் ஒயர்கள் மரக்கிளைகள் வழியாக செல்கிறது. அதனால், மின் கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.--- சரவணன், பொள்ளாச்சி.

ரோடு படுமோசம்

கிணத்துக்கடவிலிருந்து சொலவம்பாளையம் செல்லும் ரோடு, ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இந்த ரோட்டை சரி செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் அளிக்காததால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.- நந்தகுமார், கிணத்துக்கடவு.

நகராட்சி கவனத்துக்கு

உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் பகுதி கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ளதால் விளம்பர போஸ்டர்கள் ஒட்டுமிடமாக மாறி உள்ளது. நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன்குமார், உடுமலை.

பராமரிப்பு இல்லை

உடுமலை, நேருவீதி எக்ஸ்டன்சன் ரோட்டில் ரிசர்வ் சைட்கள் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளன. இதனால் செடிகள் புதர்காடாக வளர்ந்துள்ளது. விஷப்பூச்சிகள் அவ்விடத்தில் தஞ்சமடைவதுடன் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் செல்கின்றன. மேலும், குப்பைக்கழிவுகளும் தொடர்ந்து அவ்விடத்தில் கொட்டப்படுவதால், மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.- மாரிமுத்து,உடுமலை.

சுகாதார சீர்கேடு

உடுமலை, வக்கீல் நாகராஜன் வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. திறந்த வெளியில் வீசப்படுவதால், தெருநாய்கள் அவற்றை இழுத்து வந்து ரோடு முழுவதும் பரப்பி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது.- ரஞ்சித், உடுமலை.

துார்வார வேண்டும்

உடுமலை மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மழைநீர் செல்லும் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. செடிகள் வளர்ந்து புதர்மண்டிக்கிடக்கிறது. எனவே, நகராட்சியினர் இந்த ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கருப்பசாமி, உடுமலை.

நெடுஞ்சாலை சேதம்

உடுமலை - பழநி நெடுஞ்சாலை ரோடு முறையான பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் சரியாக கவனிக்காத பட்சத்தில் வாகனங்கள் குழிக்குள் இறங்கி விபத்துக்குள்ளாகும் அளவுக்கு தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சமும் இல்லாதால் உடுமலை - பழநி ரோட்டில் பயணம் செய்வது வாகன ஓட்டுநர்களுக்கு சவாலாகவே மாறிவிட்டது.- பிரபாகரன், உடுமலை.

நிழற்கூரை இல்லை

உடுமலை, போடிபட்டி முருகன் கோவில் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு நிழ்கூரை வசதி இல்லை. நாள்தோறும் அந்த பஸ் ஸ்டாப்பை பள்ளி குழந்தைகள் உட்பட நுாற்றுக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர். மழை காலங்களில் பஸ்சுக்கு காத்திருப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.- ரேவதி, போடிபட்டி.

பயனில்லாத குப்பை தொட்டி

கிணத்துக்கடவு, தேவரடிபாளையம் பகுதியில் ரோட்டோரம் உள்ள குப்பை தொட்டி உபயோகப்படுத்தாமல், குப்பையோடு குப்பையாக கிடப்பில் போடப்பட்டு, சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து, புதிதாக குப்பைத்தொட்டி அமைக்க வேண்டும்.- குமார், கிணத்துக்கடவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !