உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கூட்டணி கட்சி எம்.பி., மீது தி.மு.க.,வினர் கடுப்பு!

கூட்டணி கட்சி எம்.பி., மீது தி.மு.க.,வினர் கடுப்பு!

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''டிராக்டருக்கு அனுமதி வாங்கிட்டு, லாரியில அள்ளுறாங்க...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''மண் விவகாரமா ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''ஆமா... சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகாவுல இருக்கிற ஐந்து ஏரிகள்ல வண்டல் மண் அள்ளுறதுக்கு, விவசாயிகளுக்கு வருவாய் துறையினர் அனுமதி தந்திருக்காங்க... டிராக்டர்கள்ல தான் மண் அள்ளணும்கிறது விதி...''ஆனா, எந்த ஏரியிலும் டிராக்டர்கள்ல மண் எடுக்கிறதே இல்லைங்க... பெரிய பெரிய டிப்பர் லாரிகள்ல மண்ணை அள்ளி எடுத்துட்டு போறாங்க... இது சம்பந்தமா, தாசில்தாரிடம் புகார் தெரிவிச்சும், எந்த நடவடிக்கையும் இல்லைங்க...''இதனால, வருவாய் துறை அதிகாரிகளுக்கு, 'கவனிப்பு' நடக்குதோன்னு அந்த பகுதி மக்கள் சந்தேகப்படுறாங்க... 'இப்படியே விட்டா ஏரியை பாதாள சுரங்கமா மாத்திடுவாங்க'ன்னும் பயப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''தடை உத்தரவு ஏட்டளவுல தான் இருக்கு ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...''தமிழகத்துல ஒரு முறை பயன்படுத்தும் 'பிளாஸ்டிக் கப், கேரி பேக், பிளாஸ்டிக் ஷீட்' உட்பட பல பொருட்களுக்கு அரசு தடை விதிச்சிருக்கோல்லியோ... இந்த பொருட்களை விற்பனை பண்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவு போட்டிருக்கு ஓய்...''பெரம்பலுார் மாவட்டத்துல இருக்கற, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், இந்த பிளாஸ்டிக் தடை விவகாரத்தை கண்டுக்கவே இல்ல... சின்ன கடைகள் துவங்கி பெரிய கடைகள் வரைக்கும், தங்கு தடையில்லாம பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தறா ஓய்...''மாவட்டம் முழுக்கவே, ஹோட்டல்கள்ல வாழை இலைக்கு பதிலா, பிளாஸ்டிக் பேப்பரை தான் பயன்படுத்தறா... கடைகளுக்கு ஏத்தபடி மாசா மாசம் அதிகாரிகளுக்கு, 'கமிஷன்' வந்துடறது... இதனால, பொதுமக்களின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.''கூட்டணி கட்சி எம்.பி., மேல கடுப்புல இருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த தொகுதியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.''மதுரை தொகுதி எம்.பி.,யா, பிரபல எழுத்தாளர் வெங்கடேசன், ரெண்டாவது முறையா ஜெயிச்சிருக்காருல்லா... மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர், தொகுதியில நன்றி தெரிவிக்க போனப்ப, கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் பெரும்பாலான வட்ட செயலர்கள், மேயர் ஆதரவு நிர்வாகிகள் யாரும் கூட போகல வே...''சமீபத்துல, மாநகர தி.மு.க., செயலர் தளபதி தலைமையில, கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்துச்சு... இதுல பேசிய பலரும், 'வெங்கடேசன் முதல் முறை ஜெயிச்சப்பவும், நம்மை கண்டுக்கல... இந்த முறையாவது நாம இங்க நின்னுருக்கலாம்... ஆனா, தலைமை உத்தரவுப்படி, வெங்கடேசனை ஜெயிக்க வச்சோம்...''ஆனா, அவரோ சமூக வலைதளங்கள்ல தான் ஆக்டிவ்வா இருக்காரு... மக்கள் பிரச்னைகளை கண்டுக்க மாட்டேங்காரு... நம்ம கட்சிக்காரங்களையும் மதிக்கிறது இல்ல...''நம்ம கட்சி நிர்வாகிகள்நல்லது, கெட்டதுல கூட கலந்துக்க மாட்டேங்காரு'ன்னு குமுறி தள்ளிட்டாவ... அவங்களை சமாதானப்படுத்துறதுக்குள்ள தளபதிக்கு போதும் போதும்னு ஆயிட்டு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.பேச்சு கச்சேரி முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 04, 2024 17:03

'கவனிப்பு ' இருக்குமோ என்று டவுட்டே வேண்டாம் பிறகு என்ன தைரியத்தில் இப்படி மண் அள்ளுகிறார்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை