தி.மு.க., நடத்தும் ரகசிய சர்வே!
''ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள், அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தர்றாங்க வே...'' என்றபடியே டீயை பருகினார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்த ஊர்ல பா...'' எனக்கேட்டார் அன்வர் பாய்.''நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சியில ஒப்பந்த பணிகளில், 15 சதவீதத்தை முன்பணமா கொடுக்குற, கான்ட்ராக்டர்களுக்கே, பணிகளை ஒதுக்குறாவ...''இதுக்காக, ஒரு குறிப்பிட்ட கான்ட்ராக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து, 'ஆன்லைன்'ல டெண்டர் போட வச்சு, அதிகாரிகளின் ஒத்துழைப் போட, டெண்டர் ஓ.கே., ஆகுதாம்வே... இதுல, ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள், கணிசமா, 'கட்டிங்' பார்க்குறாவளாம்... எதிர்ப்பு கிளம்பாம இருக்க, சில அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு மட்டும், வளர்ச்சிப் பணிகளை வாரி வழங்குதாவளாம்...''இதனால, தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கடுப்புல திரியுறாவ...'' என்றார் அண்ணாச்சி''ஈஸ்வரா, மக்கள் பணம் எப்படியெல்லாம் வீணாறது பாரும் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''மக்களுக்கு மலிவு விலையில மருந்து கிடைக்கணும்னு, தமிழகம் முழுக்க, 1,000 முதல்வர் மருந்தகங்களை சமீபத்துல திறந்தாளோன்னோ...''இதுல, 500 மருந்த கங்கள் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படறது... இந்த மருந்தகங்களுக்கு தினமும் நேரில் போய் ஆய்வு செய்யும்படி, கூட்டுறவு இணை மற்றும் துணை பதிவாளர்களுக்கு மேலதிகாரிகள் உத்தரவு போட்டிருக்கா...''சென்னையில இருக்கற அதிகாரிகளோ, நேரில் போக சோம்பேறித்தனப்பட்டுண்டு, போனில் தகவல்களை கேட்டு உயரதிகாரிகளுக்கு சொல்றாளாம்... இந்த மருந்தக திட்டத்தை பற்றியும், கன்னாபின்னானு விமர்சனம் வேற செய்யறாளாம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''ரகசிய சர்வே நடத்த சொல்லி இருக்காங்களாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.''யாருன்னு விபரமா சொல்லும்வே...'' எனக்கேட்டார் அண்ணாச்சி.''அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற காரணமா இருந்த, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு கோவையில சமீபத்துல பாராட்டு விழா நடந்துச்சு இல்லியா... இதுல எதிர்பாராத அளவுல விவசாயிகள் திரண்டுட்டாங்க...''இது தி.மு.க.,வின் கண்ணை உறுத்திடுச்சு... அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்ல இது எதிரொலிச்சிட கூடாதுன்னு ஆளுங்கட்சி நினைக்குதாம்...''அதனால, கொங்கு மண்டல மக்கள் மற்றும்விவசாயிகளின் தேவைகள், நீண்ட நாளா நிலுவையில் இருக்குற கோரிக்கைகளை கேட்டு பட்டியல் தயாரிக்கும்படி, தேர்தல் வியூக பணி செய்யும் நிறுவனத்துக்கு தி.மு.க., தலைமை உத்தரவிட்டு இருக்குதுங்க...''அந்த நிறுவனம், கொங்கு மண்டலத்தில் இப்ப ரகசிய சர்வே நடத்துதுங்க... அத்திக்கடவு - அவிநாசி திட்டம், அ.தி.மு.க.,வுக்கு எப்படி நல்ல பேர் வாங்கி கொடுத்துச்சோ, அதே மாதிரி பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேத்துனா, 'ஸ்கோர்' செஞ்சிடலாமுன்னு யோசனை சொல்லியிருக்காங்களாம்...''வர்ற பட்ஜெட்டில் இது சம்பந்தமா அறிக்கை வந்தாகூட ஆச்சரியமில்லங்க...'' என்றார் அந்தோணிசாமி. அரட்டை முடியவே பெஞ்ச் கலைந்தது.