சுப்பிரமணியபுரா,கல்லுாரி மாணவி கொலையில், கைதான 15 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.பெங்களூரு, சுப்பிரமணியபுரா பிருந்தாவன் லே - அவுட்டில் வசித்தவர் பிரபுத்யா, 22. கல்லுாரி மாணவி. கடந்த 15ம் தேதி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக 15 வயது சிறுவனை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து, சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளான்.* கண்ணாடி உடைந்ததுஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:பிரபுத்யாவின் தம்பியும், கைதான சிறுவனும் நண்பர்கள் ஆவர். இதனால் பிரபுத்யா வீட்டிற்கு, சிறுவன் அடிக்கடி சென்றுள்ளான். சில தினங்களுக்கு முன்பு, சிறுவனும், அவனது நண்பனும் தெருவில் நின்று விளையாடி உள்ளனர். அப்போது நண்பன் அணிந்திருந்த, விலை உயர்ந்த கண்ணாடியை, சிறுவன் உடைத்துவிட்டான்.கண்ணாடியை சரி செய்து கொடுக்கும்படி, சிறுவனிடம், நண்பன் கூறி உள்ளார். கடைக்கு சென்று கேட்டபோது 2,000 ரூபாய் ஆகும் என, கடைக்காரர் கூறி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு பிரபுத்யா வீட்டிற்குச் சென்ற சிறுவன், பிரபுத்யாவின் மணிபர்சில் இருந்து 2,000 ரூபாய் திருடினார். இது பிரபுத்யாவுக்கு தெரிந்துவிட்டது.* மொபைல் போன் மாயம்கடந்த 15ம் தேதி சிறுவனை, வீட்டிற்கு வரும்படி கூறி உள்ளார். பின்பக்க வாசல் கதவை பிரபுத்யா தான், திறந்துவிட்டு உள்ளார். 'என்னிடம் திருடிய 2,000 ரூபாயை தந்து விடு. இல்லாவிட்டால் உனது பெற்றோரிடம் சொல்வேன்' என, எச்சரித்துள்ளார். பயந்து போன சிறுவன், பிரபுத்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போல நடித்து, காலை வாரி உள்ளான்.கீழே விழுந்த அவர், மயக்கம் அடைந்துள்ளார். வீட்டில் நடந்த சில பிரச்னைகளால், பிரபுத்யா பல முறை தற்கொலைக்கு முயன்றதாக, சிறுவனிடம், பிரபுத்யாவின் தம்பி ஏற்கனவே கூறி இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிறுவன், சமையல் அறைக்குச் சென்று, கத்தியை எடுத்து வந்து, பிரபுத்யாவின் கைநரம்பையும், கழுத்தையும் அறுத்துக் கொன்று உள்ளார். பின்னர் பிரபுத்யா எழுதியது போன்று, தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.கொலை நடந்த நாளில் இருந்து, பிரபுத்யாவின் மொபைல் போன் மாயமானதும் தெரிய வந்துள்ளது. ஆனால் சிறுவனிடம் மொபைல் போன் இல்லை. இதனால் மொபைல் போன் என்ன ஆனது என்றும், போலீசார் விசாரிக்கின்றனர். மொபைல் போன் கிடைத்தாலும், மேலும் சில மர்மம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.