மக்கள் நீதிமன்றத்தில் 1387 வழக்குகளுக்கு தீர்வு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்கு, சமரச குற்றவியல் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி கடன் நிலுவை சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி, கூடுதல் மாவட்ட நீதிபதி பார்த்தசாரதி, மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், குடும்ப நல நீதிபதி பசும்பொன் சண்முகையா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி செல்வம், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதர்ஷினி, வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர். 299 குற்றவியல் வழக்கு, 222 காசோலை மோசடி வழக்கு, 237 வங்கிக் கடன் வழக்கு, 291 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு, 251 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்கு மற்றும் 887 சிவில் வழக்கு, 1118 மற்ற குற்றவியல் வழக்கு என மொத்தம் 3305 வழக்குகள் பிரசீலனைக்கு எடுக்கப்பட்டு 1234 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது. ரூ.14 கோடியே 97 லட்சத்து 15 ஆயிரத்து 464 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது. வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 780 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 153 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.3 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரத்து 790 வரை வங்கிகளுக்கு வரவானது.