உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / அமைச்சர் கனவில் மிதக்கும் இளம் எம்.எல்.ஏ.,

அமைச்சர் கனவில் மிதக்கும் இளம் எம்.எல்.ஏ.,

''அறிக்கையில், நண்பர் பெயரை குறிப்பிடாம தவிர்த்துட்டாருங்க...'' என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.''கோவை, அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசனை பா.ஜ., தரப்பு மிரட்டியதா, தி.மு.க., - காங்., கூட்டணி குற்றம்சாட்டினாங்களே... இதுக்கு பதிலடி தந்து, தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டாருங்க...''அதுல, 'ஜெயலலிதாகாலில் சாத்துார் ராமச்சந்திரன் விழுந்தாரே... அதே மாதிரி, கருணாநிதி முதல்வரா இருந்தப்ப, ஒரு சினிமா விழாவுல, நடிகர் அஜித் சர்ச்சைக்குரிய வகையில பேசினாரே... அப்புறமா, கோபாலபுரத்துல கருணாநிதியை பார்த்து, வருத்தம் தெரிவிச்சாரே... இதை எல்லாம், திராவிட கட்சிகள் மிரட்டி தான் செய்ய வச்சதுன்னு நாங்களும் குற்றம் சாட்ட முடியுமே'ன்னு பொங்கியிருந்தாருங்க...''இதுல, அந்த காலகட்டத்துல நடிகர் ரஜினி அறிவுரைப்படி தான், கருணாநிதியை அஜித் பார்த்து வருத்தம் தெரிவிச்சாரு... ஆனா, ரஜினி, தன் நீண்டகால நண்பர் என்பதால, அவரது பெயரை அறிக்கையில குறிப்பிடாம தியாகராஜன் தவிர்த்துட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுது... வாரந்தோறும்வெள்ளிக்கிழமை நடக்கிற முகாம்ல, காலையிலயே மருத்துவபரிசோதனைகள் முடிஞ்சாலும், மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை சாயந்தரம்,5:00 மணிக்கு மேல தான் அதிகாரி தர்றாரு பா...''அங்க இருக்கிற உதவியாளரும், விண்ணப்பம் பூர்த்தி செய்றதுல சந்தேகம் கேட்குற மாற்றுத்திறனாளிகளிடம், எரிஞ்சு விழுறதோட, 'வா, போ'ன்னு மரியாதை இல்லாமலும் பேசுறாரு பா...''அரசு பணியில இருக்கிறவங்களுக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டர் வழங்க விதியில இடமில்ல... ஆனா, திருப்பூர்ல ரேஷன் ஊழியருக்கு இலவச ஸ்கூட்டர் குடுத்திருக்காங்க... ஏற்கனவே, இலவச ஸ்கூட்டர் வாங்கியவங்களுக்கு திரும்பவும் குடுத்திருக்காங்க பா...''இது சம்பந்தமா, கலெக்டருக்கு நிறைய பேர் புகார் அனுப்பியிருக்காங்க... அவர் நடவடிக்கை எடுக்கலைன்னா, போராட்டத்தில் குதிக்கவும் மாற்றுத் திறனாளிகள் முடிவு பண்ணியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''அமைச்சர் கனவுல மிதந்துண்டு இருக்கார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மாநில மாணவர் அணி செயலராகவும் இருக்கார்... ரெண்டாவது முறையா இந்த தொகுதியில ஜெயிச்சிருக்கார் ஓய்...''இவர், 2021ல தி.மு.க., ஆட்சிக்கு வந்தப்பவே, அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார்... ஆனா, கிடைக்கல... சமீபகாலமா, உதயநிதியுடன் ரொம்பவே நெருக்கமாகிட்டார் ஓய்...''சீக்கிரமே, அமைச்சரவை மாற்றம் நடக்க போறதா தகவல்கள் பரவறதே... இதுல, எழிலரசனுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும்னு சொல்றா ஓய்...''அதே நேரம், 'அஞ்சு முறை எம்.எல்.ஏ.,வா ஜெயிச்சு, மாவட்ட செயலராகவும் இருக்கற உத்திர மேரூர் எம்.எல்.ஏ., சுந்தரை மீறி, எழிலரசனுக்கு அமைச்சர் பதவி தந்தா, சுந்தர் தரப்பு சும்மா இருக்காது'ன்னு அவரது ஆதரவாளர்கள் சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெரியவர்கள் பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 21, 2024 18:55

ரஜனி சொன்னாலும் சொன்னார், நேற்று உறுப்பினரான ஆட்கள் முதல் அமைச்சர் கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள் அனுபவம் மூலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது ‘நீங்கள் ‘சம்பாதிப்பதை’ நிறுத்தி எங்களுக்கு எப்போது வாய்ப்பு கொடுக்கப் போகிறீர்கள் ?’ என்று ஆளுக்கு ஆள் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்


ravi ganesh
செப் 21, 2024 11:24

சூப்பர்


R.RAMACHANDRAN
செப் 21, 2024 09:21

ரேஷன் கடை ஊழியர்கள் அரசு பணியாளர்கள் அல்ல அரசும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் இல்லை என கூட்டுறவு சங்கங்களும் கூறிக்கொண்டு அவர்களுக்கு ஒப்பந்தப்படி ஊதியம் வழங்காமல் குறைத்து வழங்கி 1990 முதல் சுரண்டி வரும் வகையில் அரசு ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளது. இதற்கு நீதி மன்றங்களும் உடந்தை.அதனை வழங்கி இனி கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க அரசு மான்யம் வழங்கினால் அவர்கள் ஏன் இலவசம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை