இஞ்சி டீயை பருகியபடியே, “மின்வாரிய அதிகாரிகள் திணறிட்டு இருக்காங்க...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி. “அவங்களுக்கு என்ன வே பிரச்னை...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி. “விவசாய பயன்பாட்டுக்கு, புதுசா 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்னு தமிழக அரசு அறிவிச்சிருக்கு... அறிவிப்பு வந்தாலும், எந்த அடிப்படையில் வழங்கப்படும்னு தெளிவான வழிகாட்டுதல் எதையும் வெளியிடலைங்க... “மின் இணைப்புக்கு விண்ணப்பிச்சிட்டு, பல ஆயிரம் விவசாயிகள் காத்துட்டு இருக்காங்க... இவங்க, அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகங்கள்ல போய் விசாரிக்கிறப்ப, பதில் தர முடியாம அதிகாரிகள் தவிக்கிறாங்க... “இதனால, ‘50 ஆயிரம் இலவச இணைப்புகளும் யார் யாருக்கு எப்ப வழங்கப்படும்னு தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடணும்’னு, மின்வாரிய அதிகாரிகள் கேட்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி. “தங்க மோதிரத்தை தொலைச்சிட்டார் ஓய்...” என்றார் குப்பண்ணா. “யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய். “தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேத்தி திருமண விழா, போன வாரம் சென்னை நீலாங்கரை தனியார் மண்டபத்துல நடந்துச்சோல்லியோ... இதுல, பல கட்சிகளின் தலைவர்களும் கலந்துண்டா ஓய்... “இந்திய குடியரசு கட்சித் தலைவரான செ.கு.தமிழரசன், சாப்பிட்டுட்டு கைகழுவும் இடத்துல, தன் கையில போட்டிருந்த நவரத்தினக்கல் பதிச்ச தங்க மோதிரத்தை தொலைச்சுட்டாராம்... மறுநாள் நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன்ல அவர் தரப்பில் புகார் குடுத்தும், புகாரை ஏத்துக்கிட்டதுக்கான சி.எஸ்.ஆர்., ரசீது கூட தரல ஓய்... “இதனால, தன் வழக்கறிஞர் மூலமா நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்காரு... அதுல, ‘மண்டபத்துல இருக்கற, ‘சிசிடிவி’ கேமரா காட்சிகளை எல்லாம் சேகரிச்சு எடுத்து வைங்க... பாதுகாப்பு பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விசாரணை நடத்தி, மோதிரத்தை கண்டுபிடிச்சு குடுங்க’ன்னு அதுல குறிப்பிட்டிருக்கார் ஓய்...” என்றார் குப்பண்ணா. “பிறந்த நாள் கொண்டாட்டத்தையே தவிர்த்துட்டாருங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்... “தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவுக்கு போன 9ம் தேதி பிறந்த நாள்... வழக்கமா இவரது பிறந்த நாளை, திருச்சி தி.மு.க.,வினர் கோலாகலமா கொண்டாடுவாங்க... “அவர் வீட்டுக்கு படையெடுக்கும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்னு பரிசு பொருட்கள் குடுத்து வாழ்த்துவாங்க... ஆனா, இந்த வருஷம் பிறந்த நாள் கொண்டாட்டத்துல நேரு ஆர்வம் காட்டலைங்க... “ஏற்கனவே, திருச்சியைச் சேர்ந்த இன்னொரு முன்னாள் அமைச்சரான மகேஷ், பள்ளிக்கல்வித் துறையில நடந்த ஊழல் தொடர்பா கைதாகி ஜெயில்ல இருக்காரு... நேரு மீதும் நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடுகள் தொடர்பா வழக்குகள் பதிவாகியிருக்கு... தன் மீதும் கைது நடவடிக்கை பாயலாம்னு பயப்படுறதால, பிறந்த நாள் விழாவை நேரு தவிர்த்துட்டாருங்க... “அதேபோல, தீபாவளிக்கு கட்சியினரை நல்லா கவனிக்கிற நேரு, இந்த முறை தன் ஆதரவாளர்களை கூப்பிட்டு, ‘உங்களால முடிஞ்சதை மட்டும் கட்சியினருக்கு செய்யுங்க... நான் எதுவும் செய்ற நிலையில் இல்ல’ன்னு கையை விரிச்சிட்டாருங்க...” என முடித்தார் அந்தோணிசாமி. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.