மேலும் செய்திகள்
நிறுத்திய வசூலை மீண்டும் துவங்கிய போலீசார்!
30-Sep-2025
பி ல்டர் காபியை ருசித்தபடியே, “செய்யாத சாதனைக்கு விளம்பரம் ஒரு கேடான்னு கேக்கறா ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா. “என்ன விஷயம் பா...” என கேட்டார், அன்வர்பாய். “தஞ்சாவூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, காமராஜர் மார்க்கெட்டை புதுப்பிச்சா... இதனால, மாநகராட்சி நிர்வாகம், கடைகளுக்கான வாடகையை உசத்திடுத்து ஓய்... “இப்ப ஒரு கடைக்கு, 17,500 ரூபாய் பிளஸ் ஜி.எஸ்.டி., சேர்த்து வசூலிக்கறா... 'இது ஜாஸ்தி... வாடகையை குறைக்கணும்'னு தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் ராமநாதனிடம் வியாபாரிகள் பலரும் கேட்டிருக்கா ஓய்... “அவரும், 'அதுக்கென்ன... பேஷா குறைச்சிடலாம்'னு சொல்லியிருக்கார்... இதுல, என்ன வேடிக்கைன்னா, போன ஜூலை மாசமே மேயரின் பிறந்த நாள் பரிசா வாடகையை குறைச்சுட்டதா, அவரது ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர்கள் எல்லாம் வச்சிருந்தா ஓய்... “ஆனா, ரெண்டு மாசமாகியும் வாடகை குறைப்பு பத்தி, மாநகராட்சி சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகல... 'செய்யாத சாதனைக்கு வெட்டி விளம் பரமா'ன்னு வியாபாரிகள் எல்லாம் புலம்பறா ஓய்...” என்றார், குப்பண்ணா. “குடிநீர் இணைப்புல நடந்த கோல்மாலை கேளுங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... “மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கிறாங்களே... துாத்துக்குடி மாவட்டம், குளத்துார் பஞ்சாயத்தில், குடிநீர் இணைப்பு கேட்டு, 'டிபாசிட்' கட்டிய பலருக்கும் இணைப்பே தரல பா... “இது சம்பந்தமா, மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போய் டிபாசிட் ரசீதை காட்டி விளக்கம் கேட்டிருக்காங்க... அப்ப தான், அது போலி ரசீதுகள்னு தெரிஞ்சுது பா... “பஞ்சாயத்தின் தலைமை பொறுப்பில் முன்னாடி இருந்த ஆளுங்கட்சி பெண் புள்ளியும், அவரது ஆட்களும் போலி ரசீதுகளை வழங்கி, டிபாசிட் பணத்தை முறைகேடு பண்ணிட்டதா சொல்றாங்க... இது சம்பந்தமா கலெக்டருக்கு புகார் போய், அவரும் விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்காரு... இதனால, ஆளுங்கட்சி பெண் புள்ளி கலக்கத்துல இருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய். “மாலதி, நாளைக்கு பேசுதேன்...” என, மொபைல் போனை, 'கட்' செய்தபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, “லஞ்ச பணத்துல ஆயுத பூஜை கொண்டாடியிருக்காவ வே...” என்றார். “எந்த துறையிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி. “செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கு... இந்த பகுதியில், முறைகேடா நிறைய மின் இணைப்புகள் குடுத்திருக்காவ வே... “முத்துமாரியம்மன் கோவில் தெருவில், அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிய அடுக்குமாடி வீடுகளுக்கு, வருவாய் துறையின் தடையில்லா சான்றிதழ் இல்லாமலே, ஒன்பது மின் இணைப்புகளை முறைகேடா குடுத்திருக்காவ... இதுக்காக, மின்வாரியத்தின் பொறுப்பு அதிகாரிக்கு சில லட்சங்கள் கைமாறியிருக்கு வே... “இந்த பணத்தை அலுவலகத்துல இருக்கிற பலருக்கும் பிரிச்சு குடுத்துட்டு, மீத பணத்துல ஆயுத பூஜையை தடபுடலா கொண்டாடியிருக்காவ... இது தவிர, ஆயுத பூஜைக்குன்னே சில தொழிற்சாலைகள்ல சிறப்பு வசூலும் நடத்தியிருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி. டீ கடை ரேடியோவில், 'அடுத்து நீங்கள் கேட்கவிருக்கும் பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா...' என்ற அறிவிப்பு வெளியாக, பெரியவர்கள் கிளம்பினர்.
30-Sep-2025