உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / திருவொற்றியூரில் 18,000 பட்டா வழங்க துணை முதல்வர் உறுதி

திருவொற்றியூரில் 18,000 பட்டா வழங்க துணை முதல்வர் உறுதி

திருவொற்றியூர் :''திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், 18,000 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், திருவொற்றியூர் தாலுகாவின், எண்ணுார் - கத்திவாக்கம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த, 1,500 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, திருவொற்றியூர் - வெள்ளையன் செட்டியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமையில் நடந்த விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார். பின், உதயநிதி பேசியதாவது : பெஞ்சல் புயல் பாதிப்பின் போது, இப்பகுதிக்கு நேரடியாக வந்து, களத்தில் மக்களோடு நின்று, நிவாரண பணிகள் மேற்கொண்டேன். முதல்வர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியின் படி, வருவாய் துறை அமைச்சர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டு, பட்டா கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஜூலையில் மாதவரம் சட்டசபை தொகுதியில் 2,200, சோழிங்கநல்லுார் தொகுதியில் 2,000, திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் 2,120 பேருக்கு என, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 1.38 லட்சம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் 18,000 பேருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பட்டாவை நீங்கள் தேடி போன காலம் மாறி, அதிகாரிகள் மக்களை தேடி வந்து பட்டா வழங்கியுள்ளனர்.வடசென்னையை மேம்படுத்த, 6,000 கோடி ரூபாயில், வடசென்னை வளர்ச்சி திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றால் பயன்பெற்றவர்கள் தி.மு.க., அரசின் துாதுவர்களாக செயல்பட்டு, அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு, உதயநிதி பேசினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, அரசு கூடுதல் தலைமை செயலர் அமுதா, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார் ஜகடே, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன், துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, எம்.எல்.ஏ.,க்கள் சங்கர், மூர்த்தி, எபினேசர், ஆர்.டி.சேகர், எழிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏமாற்றம்

நிகழ்ச்சியில் பங்கேற்ற, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி சங்கர், மரியாதை நிமித்தமாக உதயநிதிக்கு, சால்வை அணிவித்த போது, திடீரென அவரது காலில் விழுந்தார். இதை எதிர் பாராத உதயநிதி, அவரை சட்டென துாக்கி விட்டு, காலில் விழக் கூடாது என அறிவுறுத்தினார். துணை முதல்வர் உதயநிதி, 50 பேருக்கு பட்டா வழங்கி விட்டு கிளம்பினார். மற்றவர்களுக்கு அதிகாரிகள் பட்டாவினை வினியோகம் செய்தனர். இதில், எண்ணுார், முகத்துவார குப்பம், 3, 4, 5 வது தெரு மற்றும் சிவன்படை வீதிக்குப்பம் - எல்லையம்மன் கோவில் தெருவில், 30 க்கும் மேற்பட்டோர் பட்டா விடுப்பட்டிருந்தது. இதனால், ஏமாற்றமடைந்தவர்கள், எம்.எல்.ஏ., விடம் முறையிட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர் கூறி சென்றனர். சமாதானம் அடையாத மக்கள், ஆர்.டி.ஓ., பெருமாள், தாசில்தார் சகாயராணி, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோரிடமும் முறையிட்டனர். தொடர்ந்து, வி.ஏ.ஓ., சிலம்பரசனிடம் பட்டா வராதது குறித்து கேள்வி எழுப்பினர். அவர், ஒரு மணி நேரமாக மக்களுக்கு விளக்கம் அளித்து, கலைந்து போக செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ