உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  பூத் கமிட்டி பணத்தில் கை வைத்த தி.மு.க., நிர்வாகிகள்!

 பூத் கமிட்டி பணத்தில் கை வைத்த தி.மு.க., நிர்வாகிகள்!

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், ''அதிகாரிகள் ஆசியுடன் அள்ளி குவிக்காரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்... ''சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் வர்ற தாம்பரம் கலால் பிரிவில், ஒரு போலீஸ்காரர் இருக்காரு... சமீபத்தில் இவர், கூடுவாஞ்சேரி கலால் துறை ஏரியாவுல வர்ற ஒரு மளிகை கடைக்கு போய், 'குட்கா' வழக்கு பதிவு செய்றதா மிரட்டி, 45,000 ரூபாயை பறிச்சிருக்காரு வே... ''இது வெளியில தெரியவே, அவரை கட்டுப்பாட்டு அறைக்கு துாக்கி அடிச்சிட்டாவ... இவர், ஏற்கனவே, 2023ல் மணிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தப்ப, குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை, காயலான் கடை யில் வித்து, இடமாறுதல் செய்யப்பட்டாரு வே... ''அப்புறமா, உளவுப்பிரிவுக்கு மாத்தினாவ... அங்கயும் இவர் மீது ஏகப்பட்ட புகார் எழவே, கலால் துறைக்கு மாத்தினாவ வே... 'எங்க போனாலும், வசூல் வேட்டையை நிறுத்தவே மாட்டேங்காரு... இவருக்கு உயர் அதிகாரிகள் ஆதரவு இருக்கு'ன்னு சக போலீசாரே சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி. ''தாமோதரன், இப்படி உட்காருங்க...'' என்ற அன்வர்பாயே, ''உணவுப்படியில் கை வச்சுட்டாங்க பா...'' என்றார். ''எந்த துறையிலங்க இந்த அநியாயம்...'' என கேட்டார், அந்தோணிசாமி. ''சென்னை, தாம்பரம், ஆவடி கமிஷனரகங்களின் கீழ் பணிபுரியும் போலீசாருக்கு, தினமும் உணவுப்படியா, 300 ரூபாய் தருவாங்க... இதுக்கான பைல்களை தயாரிச்சு, அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்குற பணிகளை, அமைச்சு பணியாளர்கள் தான் செய்றாங்க பா... ''இதுல, சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் இருவர், போலீசாருக்கான உணவுப்படியில் மோசடி செஞ்சுட்டாங்க... அதாவது, உணவுப்படி வாங்குற போலீசார் பட்டியலில், தங்களது பெயர்களையும் சேர்த்து, பணத்தை வாங்கிட்டாங்க பா... ''இதை, உயர் அதிகாரிகள் கண்டுபிடிச்சிட்டாலும், சம்பவத்தை மூடி மறைக்க பார்க்கிறாங்க... மோசடி செஞ்சவங்க பெயர்களைக் கூட, யாருக்கும் தெரியாம ரகசியமா வச்சிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய். ''தலைமை தந்த பணத்துல, 'கை' வச்சுட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''தி.மு.க.,வுல தமிழகம் முழுக்க, 65,000க்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் இருக்கு... தேர்தல் வர்றதால, சமீபத்துல பூத் கமிட்டிக்கு தலா, 8,000 ரூபாய் வீதம் தலைமையில இருந்து குடுத்திருக்கா ஓய்... ''இந்த பணத்தை, அந்தந்த மாவட்ட மற்றும் ஒன்றிய செயலர்கள் வழியா பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு குடுத்தா... ஆனா, சிவகங்கை மாவட்டத்தில் இருக்கற, 1,536 பூத் கமிட்டிகளுக்கும் தலா, 5,000 ரூபாயை தான் குடுத்திருக்கா ஓய்... ''தலைமை தந்த பணத்துல, ஒன்றிய நிர்வாகிகள், 3,000 ரூபாயை அமுக்கிட்டா... அதே நேரம், 'அ.தி.மு.க., தலைமை தர்ற பணம் முழுதும், பூத் கமிட்டிகளுக்கு அப்படியே போயிடறது... ''இதனால, அந்த கட்சியினர் முழுமூச்சா தேர்தல் வேலைகளை செய்றா... எங்க பணத்துல இப்படி கை வச்சா, நாங்க எப்படி உற்சாகமா வேலை பார்க்கறது'ன்னு தி.மு.க., பூத் கமிட்டியினர் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா. அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.V.Srinivasan
பிப் 19, 2026 07:50

திராவிட மாடல் ஆட்சியில் மந்திரிகள், எம் எல் ஏக்கள், அரசு ஊழியர்கள் லஞ்சம், ஊழலில் ஒருத்தனுக்கொருத்தன் சளைச்சவன் இல்லைப்பா. செய்திகளை பார்த்தாலே வெறுப்பா இருக்கு. 2026ல மாறுதல் வரணும் ஆண்டவா.


D.Ambujavalli
பிப் 19, 2026 06:01

இந்த ‘காய் வைக்கும்’ செய்திகளைக் கேட்டால் என்னவோ அடிக்கடி ‘தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருட்டு’ பழமொழிதான் வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை